முகேஷ் அம்பானியின் இந்திய பன்னாட்டு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெறும் பெட்ரோலியம் மற்றும் தொலை தொடர்பில் மட்டும் சிறந்து விளங்கவில்லை. மாறாக அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய மாம்பழத்தோட்டத்தை சொந்தமாக வைத்து ஏற்றுமதி செய்து வருகிறது. சரி முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஏன் மாம்பழ தோட்டத்தை உருவாக்க வேண்டும்?
இந்த கேள்விக்கான கதை 1997-ம் ஆண்டில் ஆரம்பிக்கிறது. ரிலையன்ஸ்க்கு சொந்தமான குஜராத் ஜாம்நகரில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் மிகப்பெரிய மாசுபாடு ஏற்படுவதாக தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களிலிருந்து பல புகார்கள் வந்தன. அந்தப் பிரச்னையை விரைந்து தீர்க்க ரிலையன்ஸுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. எனவே மாசு அளவை கட்டுப்படுத்த ரிலையன்ஸின் ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலைக்கு அருகிலுள்ள தரிசு நிலங்களை பசுமை மண்டலமாக மாற்ற திட்டமிட்டது, ரிலையன்ஸ். அதன்படி அந்த தரிசு நிலங்களை விலைக்கு வாங்கி 200-க்கும் மேற்பட்ட மா வகைகளில் 600 ஏக்கர் பரப்பளவில் நடப்பட்டு மாம்பழத் தோட்டம் அமைக்கப்பட்டது.
மாசு அளவைக் கட்டுப்படுத்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் ஒரு மாந்தோட்டத்தை உருவாக்கும் யோசனையை ரிலையன்ஸ் அறிமுகப்படுத்தியது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் நினைவாக இந்த பழத்தோட்டத்திற்கு `திருபாய் அம்பானி லக்கிபாக் அம்ராயி’ என்று பெயரிடப்பட்டது. முகலாய பேரரசர் அக்பரால் பீகார் தர்பங்காவில் லக்கிபாக் என அழைக்கப்படும் மாம்பழத்தோட்டம் 16-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது.
அதனால் ஈர்க்கப்பட்ட ரிலையன்ஸ், பழத்தோட்டத்தின் பெயரை இப்படி தேர்வு செய்து வைத்தது. ஆண்டுதோறும் பழ தோட்டத்திலிருந்து சுமார் 127 வகையான மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளூர் மற்றும் உலகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு இந்திய மா வகைகளான கேசர், அல்போன்சா, ரத்னா, சிந்து, நீலம் மற்றும் அமர பள்ளி போன்றவை மட்டுமில்லாமல், வெளிநாட்டு மா வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.