முதலீட்டாளர்களை ஈர்க்க துபாய் சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் ஏராளமாக இருக்கிறது, நீங்கள் முதலீடு செய்ய தாரளமாக வரலாம் என தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
மே 2021 இல் பதவியேற்ற பிறகு மு.க ஸ்டாலினின் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். அங்கு முதலீட்டாளர்களுடன் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பேசிய அவர், “முதலீடு, புதுமை, வளர்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் கூட்டாண்மையில் ஈடுபட உங்களைத் தமிழகத்திற்கு அழைக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன்” என்றார்.
“Tamil Nadu – Investors First Port of Call,” என்கிற மாநாட்டில், ஸ்டாலின் மற்றும் துபாய் அரசு அதிகாரிகள் முன்னிலையில் தமிழ்நாட்டில் ரூ2600 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தந்களில் யுஏஇ நிறுவனங்களுக்கு கையெழுத்திட்டன.
வழிகாட்டுதல் பணியகத்தின் எம்டி மற்றும் சிஇஓ பூஜா குல்கர்னி பல்வேறு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் ஆவணங்களை பரிமாறிக் கொண்டார்.
ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர், நோபல் ஸ்டீல்ஸ், ஒயிட் ஹவுஸ் மற்றும் டிரான்ஸ்வேர்ல்ட் குரூப் ஆஃப் கம்பெனிகளின் அதிகாரிகள், ஷரஃப் குழுமம் ரூ.2,600 கோடி முதலீட்டிற்கான ஆவணங்களை மாற்றிக்கொண்டது. இதன் மூலம் தமிழகத்தில் புதிதாக 9,700 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர் நிறுவனம் 500 கோடி ரூபாயை முதலீடு செய்து, 500 படுக்கை வசதிகளை தமிழ்நாட்டில் அமைக்கவுள்ளது. இது மூலம் 3,500 வேலை வாய்ப்புகள் உருவாகும்.
அயலக மண்ணில் இருக்கிறேனா அல்லது தமிழ்நாட்டில் இருக்கிறேனா என்று தெரியாத அளவிற்கு அமீரக வாழ் தமிழர்களின் அன்பில் மிதந்தேன்.
‘உங்களில் ஒருவன்’ என அடையாளப்படுத்திக் கொள்ளும் என்னை, ‘நம்மில் ஒருவர் நம்ம முதல்வர்’ என வாரி அணைத்த அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டது மகிழ்ச்சியான தருணம்! pic.twitter.com/ZNRZOVikTH
— M.K.Stalin (@mkstalin) March 26, 2022
நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம் ரூ1,000 கோடி முதலீட்டின் மூலம், புதிதாக 1200 வேலைவாய்ப்புகள் உருவாகும். அதே நேரத்தில் 3,000 வேலைகளை உருவாக்கும் ஒருங்கிணைந்த தையல் ஆலையை அமைக்க ஒயிட் ஹவுஸ் 500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
Transworld Group of Companies 100 கோடி ரூபாய் முதலீடு செய்து உருவாக்கும் உணவுப் பூங்கா மூலம் புதிதாக 1000 வேலை வாய்ப்புகள் தமிழகத்தில் உருவாக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அஷ்ரஃப் குழுமம் 500 புதிய வேலைகளை உருவாக்கும் சரக்கு போக்குவரத்து பூங்காவை அமைப்பதற்காக 500 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது.
மேலும் பேசிய ஸ்டாலின், “ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – தமிழ்நாடு இடையே கலாச்சார மற்றும் வர்த்தக உறவுகளின் நீண்ட வரலாற்றைப் பகிர்ந்து கொள்கின்றன. உறவுகளை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் உறுதிபூண்டுள்ளோம். இந்த மாநாட்டில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையைப் பார்த்த பிறகு இது தெளிவாகியுள்ளது. துபாய் அழகான நகரம் மட்டுமல்ல பெரிய வணிகங்கள் நடைபெறும் இடமாகவும் மாறிவிட்டது. 50 ஆண்டுகளுக்கு முன்பு, துபாயில் மக்கள் தொகை ஒரு லட்சத்திற்கும் குறைவாக இருந்தது. ஆனால், இன்று அதிகரித்துள்ளது. உலக அளவில் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் பெரிய முதலீடுகளைச் செய்ய உங்கள் அனைவரையும் அழைக்கிறேன் கொரோனா பெருந்தொற்று மத்தியிலும், தமிழ்நாடு 124 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoUs) கையெழுத்திட்டது. 8 பில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்ப்பது மூலம், இரண்டு லட்சம் வேலைகளை உருவாக்கியது
பொருளாதாரங்களில் எதிர்மறையான வளர்ச்சிக்கு மாறாக 2020-21 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.8 சதவீதத்தை பதிவு செய்துள்ளது. உலக முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது.
ரியல் எஸ்டேட், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. வணிகம் செய்வதற்கும் முதலீடுகளை மேற்கொள்வதற்கும் எங்களின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்” என்றார்.