வேலூர்: பாலியல் தொல்லை… 7-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி! – 55 வயது ஆசிரியர் சிறையிலடைப்பு

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள திருவலம் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மொத்தம் 561 மாணவிகள் படிக்கிறார்கள். இவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக 25 இருபால் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பள்ளியில், கடந்த 9 ஆண்டுகளாக ஆங்கில பாட ஆசிரியராகப் பணியாற்றிவரும் முரளி கிருஷ்ணன் என்பவருக்கு 55 வயது ஆகிறது. இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். அவர்கள் திருமணமாகி தங்கள் குழந்தைகளுடன் வசித்துவருகிறார்கள்.

பேரக் குழந்தைகளை எடுத்துவிட்ட ஆசிரியர் முரளி கிருஷ்ணன், பேத்தி வயதாகும் மாணவிகளிடம் அநாகரிகமான முறையில் நடந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது. மாணவிகளைக் கன்னத்தைப் பிடித்து கிள்ளுவது, ஜடையைப் பிடித்து இழுப்பது, தொட்டுப் பேசுவது மட்டுமின்றி இரட்டை அர்த்தத்தில் பேசுவது என நாளுக்குநாள் எல்லை மீறி நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

பாலியல் தொல்லை

இந்த நிலையில், 13 வயதாகும் ஏழாம் வகுப்பு மாணவி ஒருவரைக் கடந்த சில நாள்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்திவந்திருக்கிறார் ஆசிரியர் முரளி கிருஷ்ணன். பாதிக்கப்பட்ட அந்த மாணவி, கடந்த வாரமே தன் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். மாணவியின் தாய், பள்ளிக்குச் சென்று ஆசிரியர் முரளி கிருஷ்ணனிடம் நடந்ததுக் குறித்து கேள்விக் கேட்டிருக்கிறார். “என் பேத்தி வயசு அவளுக்கு… நான்போய் அவகிட்ட தப்பா நடந்துப்பேனா?’’ என்று கூறி மழுப்பியிருக்கிறார் ஆசிரியர். அப்போது, மாணவியின் தாய், “பெண் பிள்ளைகளை அவள்.. இவள் என்று ஒருமையில் பேசாதீங்க. வகுப்பறையில நீங்க, ‘வாடி.. போடி’னு பேசுறாதாவும் பொண்ணு சொல்றா. குழந்தைங்கக்கிட்ட கொஞ்சம் நல்லவிதமா பேசுங்க சார்’’ என்று சொன்னதோடு, மாணவியின் தாயும் சென்றுவிட்டார்.

ஆசிரியர் முரளி கிருஷ்ணன் தனது வயதைக் காரணம் காட்டியே ‘தாத்தா’ தொரணையில் தப்பித்துவந்துள்ளார். தாயை அழைத்துவந்து பேசிய மாணவிக்கு மீண்டும் மீண்டும் அவர் தொல்லைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தப் மாணவியிடம் 2 நாள்களுக்கு முன்பு கடிதம் ஒன்றையும் கொடுத்து படிக்கக் கூறினாராம் ஆசிரியர் முரளி கிருஷ்ணன். அதில், ‘‘ராணிப்பேட்டை மாவட்டம் சீக்கராஜபுரம் ஹவுஸ்சிங் போர்டு பகுதியில் என் வீடு இருக்கிறது. என்கூட வீட்டுக்கு வர்றியா?’’ என்று அவர் எழுதியிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஆசிரியர் முரளி கிருஷ்ணன்

இது குறித்தும், தன் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார் மாணவி. பெற்றோர் மீண்டும் மாணவியை சமாதானம் செய்ய முயற்சிக்கவே, மன உளைச்சலில் இருந்த மாணவி பள்ளிக்குச் செல்லாமல் நேற்று வீட்டிலேயே இருந்திருக்கிறார். இதையடுத்து, மரச்சாமான்களுக்குப் பயன்படுத்தும் வார்னிஷை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். மயங்கி விழுந்த மாணவியைப் பெற்றோர் மீட்டு கரிகிரி தனியார் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுவந்து அனுமதித்தனர்.

சிறுமிக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது குறித்து, சிறுமியின் பெற்றோர் திருவலம் காவல் நிலையத்தில் ஆசிரியர் முரளி கிருஷ்ணன் மீது பாலியல் புகார் அளித்தனர். ‘போக்சோ’ உட்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், ஆசிரியர் முரளி கிருஷ்ணனைக் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் இன்று அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.