மாணவர்கள் நலனில் தமிழக அரசு அக்கறையுடன் செயல்படுகிறது: கொளத்தூரில் நடிகர் சங்க தலைவர் நாசர் பேச்சு

பெரம்பூர்: மாணவர்கள் நலனில் அக்கறையுடன் தமிழக அரசு செயல்படுகிறது என கொளத்தூரில் நடிகர் சங்க தலைவர் நாசர் கூறியுள்ளார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மக்கள் முதல்வரின் மனிதநேய திருநாள் எளிமையின் இளைமையே! இனம் காக்கும் வலிமையே! என்ற தலைப்பில் கொளத்தூர் தனியார் பள்ளியில் வாழ்த்தரங்கம் நடைபெற்றது. பகுதி செயலாளர் ஐசிஎப் முரளி ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு  நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில், விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நடிகர் நாசர், திரைப்பட நடிகர் மற்றும் எழுத்தாளர் ஜோமல்லூரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.நிகழ்ச்சியில், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, பகுதி செயலாளர் நாகராஜன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, ஸ்கேட்டிங் போட்டியில் உலக அளவில் முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை வென்ற கொளத்தூர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவனுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்பி கலாநிதி வீராசாமி, நடிகர் நாசர் ஆகியோர் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், “தமிழக முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் இதுவரை 300 நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளது. பாஜக தமிழகத்தில் வேர் ஊன்றாமல் இருந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றுவோம். தமிழகத்தை தலைநிமிர செய்ய வேண்டுமென்றால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகம் 40க்கு 40 என்கின்ற வகையில் வெற்றிபெறவேண்டும். அப்போதுதான் இதுசாத்தியமாகும்” என்றார்.தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நடிகர் நாசர் பேசுகையில், நடிகர் சங்கத்தின் பிரச்னையை எங்களைவிட அதிகமாக முதலமைச்சர் அறிந்து வைத்திருந்தார். முதலமைச்சர் எழுதிய உங்களில் ஒருவன் புத்தகத்தை படிக்கும் வேளையில் அவரின் பன்முக தன்மையை அறிந்துகொள்ள முடிந்தது. அவரின் பழைய நினைவுகளை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. பல மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்காக சிரமப்படும் நிலையில் அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் செலவை அரசே ஏற்கும் என அறிவிப்பது பெரிய திட்டம்” என்றார்.விஐடி பல்கலைக்கழகத வேந்தர் விஸ்வநாதன் பேசுகையில்,  “தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி 26 வருடங்கள் ஆகிறது. கட்சியை விட்டு ஒதுங்கினாலும் கொள்கையை விட்டுக்கொடுக்கவில்லை. பெரியாரின் பகுத்தறிவை நேசிக்கக்கூடியவன். திமுகவில் படிபடியாக வளர்ந்து இன்று சிறப்பான ஆட்சியை முதல்வர் நடத்தி வருகிறார். திமுகவின் வரலாற்றை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். இளைஞர்களே கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்த வரலாறு எங்கும் கிடையாது. அப்படிப்பட்ட இளைஞர்களை கொண்ட கட்சி திமுக மட்டுமே. ரஷ்யாவின் சோவியத் நாட்டின் அதிபர் ஜோசப் ஸ்டாலின் மறைந்த அதே நாளில்தான் முதலமைச்சர் தோன்றினார். முதலமைச்சரின் ஒரு ட்ரில்லியன் பொருளாதார இரட்டிப்பு திட்டத்திற்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். அப்போதுதான் அந்தத்திட்டம் முழுமையாக நிறைவேறும். தெற்காசிய நாடுகளில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த காரணத்தினாலேயே இன்றைக்கு வளர்ந்த நாடுகளாக மாறிவிட்டது. தற்போது தமிழ்நாடு முதலமைச்சர்  கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து வருகிறார். இது பாராட்டப்படக் கூடியது” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.