போராடிய ஹர்மன்ப்ரீத்; தோல்விக்குக் காரணமான ஒற்றை நோ-பால்; வெளியேறிய இந்தியா!

பெண்களுக்கான உலகக்கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்திய அணி இன்று தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டிருந்தது. தென்னாப்பிரிக்க அணி ஏற்கனவே அரையிறுதிக்குத் தகுதிப்பெற்றிருந்த நிலையில், இந்தப் போட்டியை வென்றால் இந்திய அணியும் அரையிறுதிக்குத் தகுதிப்பெற முடியும் என்ற சூழல் நிலவியது. ஆனால், பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் கடைசி பந்து வரை சென்று இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அரையிறுதி வாய்ப்பையும் இழந்தது.

இந்திய அணியே முதலில் பேட்டிங் செய்திருந்தது. இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணிக்கு நன்றாக அமையாத சில விஷயங்கள் இந்த போட்டியில் சிறப்பாக அமைந்திருந்தது. ஓப்பனிங்கில் ஷெஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா என இருவருமே சிறப்பாக ஆடினர்.

ஷெஃபாலி வர்மா

இந்த போட்டியில்தான் ஷெஃபாலி வர்மா முழுமையாக ஷெஃபாலி வர்மாவாக ஆடியிருந்தார். 46 பந்துகளில் 53 ரன்கள். 8 பவுண்டரிகள். சுற்றி சுழன்று அனைத்துத் திசைகளிலும் ஷாட்களை ஆடி அசத்தியிருந்தார்.

துரதிர்ஷ்டவசமாக, ஸ்மிருதி மந்தனா அழைத்த ஒரு ரன்னிற்கு மனமே இல்லாமல் ஓடி ரன் அவுட் ஆகினார். ஸ்மிருதி மந்தனா வழக்கம்போல நிலையாக நின்று அதேநேரத்தில் ஏதுவான பந்துகளை அட்டாக் செய்தும் நன்றாக ஆடினார். 84 பந்துகளில் 71 ரன்களை எடுத்திருந்த நிலையில் க்ளாஸின் பந்தில் ட்ரையானிடம் கேட்ச் ஆனார். இதன்பிறகு, மிதாலி ராஜும் தொடர்ச்சியாக நிலைத்து நின்று ஆடி அரைசதத்தைக் கடந்தார். வழக்கம்போல ரொம்பவே மெதுவாக ஆடாமல், சீராக ரன்களைச் சேர்த்தார். ஸ்ட்ரைக் ரேட் 80 ஐ சுற்றி இருந்தது. 68 ரன்களை எட்டியபோது க்ளாஸின் பந்தில் அவர் தலைக்கு மேலேயே தூக்கி அடிக்க முற்பட்டு விக்கெட்டை விட்டார். கடைசியில் ஹர்மன்ப்ரீத் கவுர் நின்றாலும் கடைசி 10 ஓவர்களில் பெரிதாக ரன்கள் வரவில்லை. 300-ஐ நெருங்கும் என எதிர்பார்க்கப்பட்ட அணியின் ஸ்கோர் 274 ரன்களை மட்டுமே எட்டியது. ஹர்மன்ப்ரீத் கவுர் 48 ரன்களில் ஆட்டமிழந்திருந்தார்.

தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 275 ரன்கள் தேவைப்பட்டது. இந்த டார்கெட்டை வெற்றிகரமாக டிஃபண்ட் செய்தால் மட்டுமே இந்திய அணியால் அரையிறுதிக்கு தகுதிப்பெற முடியும் என்ற சூழல் நிலவியது. இல்லையேல் வெஸ்ட் இண்டீஸ் தகுதிப்பெற்றுவிடுவார்கள்.

HarmanPreet

கடைசி ஓவரின் கடைசி பந்து வரை ஆட்டம் பரபரப்பாகச் சென்றது. தொடக்கத்தில் தென்னாப்பிரிக்க அணி முழு ஆதிக்கத்தைச் செலுத்தி ஆடி வந்தது. லிசல்லா லீ தொடக்கத்திலேயே ஹர்மன்ப்ரீத் கவுரால் ரன் அவுட் ஆக்கப்பட்டிருந்தாலும், வோல்வார்ட்டும் குடாலும் நின்று 100+ ரன்களுக்கு பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இந்தியாவின் அத்தனை பந்துவீச்சாளர்களும் இந்தக் கூட்டணியை முறிக்க முயன்று தோற்றபோது, ராஜேஸ்வரி கெய்க்வாட் இந்தக் கூட்டணியை முறித்தார். குடாலை ஸ்டம்பிங் ஆக வைத்தார். ஆனாலும், அடித்து துவம்சம் செய்து கொண்டிருந்த வோல்வார்ட் இன்னும் க்ரீஸிலேயேத்தான் இருந்தார். வேறு வழியின்றி மிதாலி ராஜ் ஹர்மன்ப்ரீத் கவுரிடம் பந்தைக் கொடுக்க, அவர் அப்படியே பந்தை காற்றில் தூக்கியே வீசி வோல்வார்ட்டை 80 ரன்களில் போல்டாக்கினார்.

தென்னாப்பிரிக்காவை இந்தியா டிஃபண்ட் செய்தது என்பதைவிட ஹர்மன்ப்ரீத் கவுர் டிஃபண்ட் செய்தார் என்றே சொல்லலாம். அத்தனை சிறப்பாக களத்தில் ஹர்மன்ப்ரீத் கவுரே எங்கும் நிரம்பியிருந்தார்.

ஹர்மன்ப்ரீத் மொத்தமாக 3 ரன் அவுட்கள், 2 முக்கிய விக்கெட்டுகள், 1 அட்டகாசமான கேட்ச் (இந்த கேட்ச் சோகத்தில் முடிந்தது தனிக்கதை).

HarmanPreet

இதுபோக பேட்டிங்கிலும் 48 ரன்களை அடித்திருந்தார் இந்த உலகக்கோப்பைக்கு முன்பாக ஹர்மன்ப்ரீத் கவுர் ஃபார்ம் அவுட்டில் இருந்தார். ப்ளேயிங் லெவனிலேயே அவருடைய இடம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், உலகக்கோப்பை தொடங்கிய பிறகு நெருப்பாக ஆட ஆரம்பித்தார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்தப் போட்டியில் பெர்ஃபார்மென்ஸில் ஒரு உச்சத்தையே தொட்டுவிட்டார். ஹர்மன்ப்ரீத் கவுரின் அட்டகாசமான செயல்பாட்டால் ஆட்டம் ரொம்பவே நெருக்கமாகச் சென்றது. கடைசி 10 ஓவர்களில் ஏறக்குறைய Run a ball லிலேயே தென்னாப்பிரிக்காவிற்கு ரன்ரேட் தேவைப்பட்டது.

டூ ப்ரீஷ் க்ரீஸில் நிற்க கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. தீப்தி சர்மா இந்த ஓவரை வீசினார்.

முதல் 4 பந்துகளிலும் தலா 1 ரன் கிடைத்துவிட, 2 பந்துகளில் 3 ரன்கள் அடிக்க வேண்டிய சூழல் உருவானது. இந்த சமயத்தில் 5 வது பந்தில் இறங்கி வந்த டூ ப்ரீஷ் லாங் ஆனில் பெரிய ஷாட்டுக்கு முயல அதுசரியாக ஹர்மன்ப்ரீத் கவுரால் கேட்ச் செய்யப்பட்டிருக்கும். இந்திய வீராங்கனைகள், ரசிகர் கூட்டம் என அத்தனை பேரும் குதூகலமடைந்தனர்.

அப்போதுதான் நடுவரால் அந்த அதிர்ச்சிகரமான முடிவு அறிவிக்கப்பட்டது. அது ஒரு நோ-பால். டூ ப்ரீஷ் மீண்டும் க்ரீஸுக்கு வந்தார். இப்போது இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டுமே தேவை. ரொம்பவே சுலபமாக இரண்டு பந்துகளில் இரண்டு சிங்கிள்களை தட்டி தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.

Team India

இந்திய அணி தோற்றதோடு அரையிறுதி வாய்ப்பையும் இழந்தது.

பயங்கர நெருக்கமாக சென்ற இந்தப் போட்டியை ஒரு நோ-பாலால் இழந்ததில் ஒட்டுமொத்த அணியுமே கடும் அப்செட். ஜூலன் கோஸ்வாமிக்கும் மிதாலி ராஜூக்கும் கடைசி தொடராக அமையப்போகிற இந்த உலகக்கோப்பையை வென்ற ஆக வேண்டும் என எண்ணியிருந்த நிலையில் இந்தத் தோல்வி பெருத்த ஏமாற்றமே. ஆனாலும், இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிப்பெற முடியாததன் பழியை ஒட்டுமொத்தமாக இந்த நோ-பாலின்மீது மட்டுமே சுமத்திவிட முடியாது. இந்த போட்டியைத் தோற்றதற்கு வேண்டுமானால் இந்த நோ-பால் காரணமாக இருக்கலாம். ஆனால், அரையிறுதிக்குத் தகுதிப்பெறாததற்கு இந்த நோ-பால் மட்டுமே காரணம் இல்லை.

உலகக்கோப்பை என்கிற பெரும் தொடருக்கான திட்டமிடலே இல்லாமல் களமிறங்கியதே இந்திய அணியின் ஏமாற்றத்திற்கு மிக முக்கிய காரணம்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் ஸ்மிருதி மந்தனாவுடன் ஷெஃபாலி வர்மா ஓப்பனராக இறங்கியிருந்தார். அடுத்த போட்டியிலேயே யஸ்திகா பாட்டியா ஓப்பனராக இறங்கியிருந்தார். டாப் – 3 பேட்டர்கள் மூவரும் இடது கை பேட்ஸ்மேனாக இருப்பதால் அதற்கடுத்த போட்டிகளிலேயே மீண்டும் ஷெஃபாலியே ஓப்பனராக்கப்பட்டு யஸ்திகா நம்பர் 3 க்கு சென்றார். கடந்த இரண்டு வருடமாக நம்பர் 4 இல் இறங்கி இந்த தொடரிலும் அப்படியே தொடர்ந்த வந்த கேப்டன் மிதாலி ராஜ் திடீரென நம்பர் 3 யில் இறங்க ஆரம்பித்தார். மீண்டும் திடீரென நம்பர் 4 க்கு இறங்கினார். இவர்களுக்கு இடையில் சிக்கி முதலில் நம்பர் 3 யில் இறங்கி வந்த தீப்தி நம்பர் 4 க்கு இறங்கி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்த போட்டியில் நம்பர் 9 க்கே சென்றுவிட்டார். கேட்பதற்கே குழப்பமாக இருக்கும் இந்த பேட்டிங் ஆர்டரோடுதான் இந்திய அணி களமிறங்கியிருந்தது. இத்தனைக்கும் இந்த உலகக்கோப்பைக்கு சில தினங்களுக்கு முன்புதான் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக நியூசிலாந்தில் வைத்தே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆடியிருந்தது. இதுவேறு அணிகளுக்கு கிடைத்திடாத பிரத்யேகமான பயிற்சிக்களம். அங்கேயே இந்த பேட்டிங் ஆர்டர் குழப்பங்களையெல்லாம் மொத்தமாக தீர்த்துவிட்டு வந்திருக்க வேண்டும். வாய்ப்பிருந்தும் இந்திய அணி அதை செய்திருக்கவில்லை. அதற்கான பலனை இப்போது அனுபவிக்கிறது.

இனியாவது சரியான முன் திட்டமிடல்களோடு களமிறங்கும் வழக்கத்தை இந்திய அணி கற்க வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.