தொடர் கொலைகள்; மேற்கு வங்காளத்தில் 355வது சட்டப்பிரிவை அமல்படுத்த காங்கிரஸ் வலியுறுத்தல்

ஹவுரா,
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேய்க் என்பவர் மார்ச் 21ந்தேதி அன்று படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, இவரது கொலை காரணமாக அவரது சொந்த ஊரான பீர்பூம் மாவட்டம் ராம்புராட் நகரில் போக்டுய் கிராமத்தில் ஏற்பட்ட வன்முறையில், கடந்த 24ந்தேதி அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பல வீடுகளுக்கு தீ வைத்தனர்.  அதில் 8 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர்.

இந்த வன்முறை சம்பவம், மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக பா.ஜ.க. போராட்டம் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், பீர்பூம் வன்முறை சம்பவம் தொடர்பாக கொல்கத்தா ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.  இந்த வழக்கு விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றி கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது.  மேலும் விசாரணை அறிக்கையை ஏப்ரல் 7ந்தேதிக்குள் தாக்கல் செய்யவும் சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், மேற்கு வங்காள காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் பஹராம்பூர் தொகுதி எம்.பி.யான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கடந்த பிப்ரவரியில் நடந்த மாணவர் தலைவர் அனீஸ் கான் மர்ம மரணத்தில் பாகுபாடற்ற மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஹவுரா நகரில் உள்ள கடம்தலா பகுதியில் இருந்து எஸ்பிளனேடு பகுதி வரை இன்று பாதயாத்திரை மேற்கொண்டார்.
இதன் ஒரு பகுதியாக அவர் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, மேற்கு வங்காளத்தில் அடுத்தடுத்து சம்பவங்கள் நடந்து வருகின்றன.  மாணவர் தலைவர் அனீஸ் கான் அவரது வீட்டின் 3வது தளத்தில் இருந்து கீழே தள்ளி விடப்பட்டு மர்ம மரணம் அடைந்து உள்ளார்.
இந்த சம்பவத்தில், உண்மையான குற்றவாளிகளை மறைத்து விட்டு அரசு விசாரணை நடத்தி வருகிறது.  அதன்பின்பு, பீர்பும் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 8 பேர் எரித்து கொல்லப்பட்ட காட்டுமிராண்டித்தன சம்பவம் நடந்துள்ளது.
எங்கள் கட்சியின் ஜல்டா நகராட்சியை சேர்ந்த கவுன்சிலர் தபன் காண்டு மிக நெருங்கிய தொலைவில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்.  ஆனால், முறையான விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை.  இந்த சம்பவங்கள் அனைத்தும் மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என தெளிவாக காட்டுகிறது என்று குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையில், ஒரு மாநில பாதுகாப்புக்காக மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க கூடிய 355வது சட்ட பிரிவை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.  இதன்படி, மாநிலத்தில் அவசரகால நிலைக்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்க வலியுறுத்தி உள்ளார்.  இதற்காக சில நாட்களுக்கு முன் ஜனாதிபதிக்கு கடிதமும் எழுதியுள்ளார்.
எனினும், இந்த உத்தரவை பிறப்பிக்காமல் மத்திய தலைமை அமைதி காப்பது, மாநிலம் மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே உள்ள ரகசிய புரிந்துணர்வு உள்ளது என்பது வெளிப்பட்டு உள்ளது என்றும் சவுத்ரி கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.