புதுடெல்லி: நடப்பு ஆண்டில் ரூ.30 லட்சம் கோடி பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மாதாந்திர மனதின் குரல்(மன் கீ பாத்) நிகழ்ச்சியை ஒட்டி வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது: இந்தியா கடந்த வாரம் ரூ.30 லட்சம் கோடி ( 400 பில்லியன் டாலர்) அளவுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. உலக அளவில் இந்தியப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதை ஏற்றுமதி சாதனை காட்டுகிறது. மக்களின் கடும் உழைப்பால்தான் உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள சந்தைகளுக்கு நம் பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறது. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உற்பத்தி செய்யப்படும் புதிய பொருட்கள் வெளிநாடுகளை சென்றடைந்துள்ளன.அசாமில் இருந்து தோல் பொருட்கள், உஸ்மானாபாத்தில் இருந்து கைவினை பொருட்கள், பிஜாப்பூரில் இருந்து பழங்கள், காய்கறிகள், சந்தவுலியில் இருந்து கருப்பு அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் வாழைப்பழங்கள் சவுதியில் கிடைக்கிறது. ஆந்திராவில் இருந்து மாம்பழங்கள் தென்கொரியாவுக்கும், லடாக்கில் உற்பத்தியாகும் ஆப்ரிகாட் பழங்கள் துபாய்க்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் இந்திய பொருட்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. புதிய பொருட்களின் தயாரிப்புகள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. முன்பை விட தற்போது, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் வெளிநாடுகளில் அதிகளவில் காண முடியும்.ஒவ்வொரு இந்தியனும் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு கொடுக்கும்போது, உள்ளூர் பொருட்கள் உலகை எட்டுவதற்கு வெகு நேரமாகாது. ஒரு காலத்தில் பெரிய நிறுவனங்களே அரசுக்கு பொருட்களை விற்று வந்தன. தற்போது, பழைய முறை மாறி வருகிறது. சிறிய கடைக்காரர்கள், தங்களிடம் உள்ள பொருட்களை அரசிடம் விற்க முடியம். இது தான் புதிய இந்தியா. z நாடு முழுவதும் உள்ள 1.25 லட்சம் சிறிய தொழில்முனைவோர், தங்களிடம் உள்ள பொருட்களை அரசிடம் விற்றுள்ளனர். கடந்த ஓர் ஆண்டில் மட்டும் ஒன்றிய அரசின் இணையதளத்தின் மூலம் ரூ.1 லட்சம் கோடி மதிப்பு உள்ள பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.