முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவருடைய குடும்பத்தினரை அவதூறாக பேசியதாக 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அண்ணாமலைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வழக்குகளை நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்று சமூக வலைதளங்களில் கூறினார்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை கட்டவிழ்த்து விடப்படும் என மிரட்டி பணம் பறித்ததாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பரபரப்புக் குற்றம்சாட்டினார்.
இது குறித்து ஆர்.எஸ். பாரதி கூறுகையில், “அண்ணாமலையால் மிரட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் யார் யார், ஒவ்வொருவரிடமிருந்தும் அவர் எவ்வளவு பணம் பெற்றார் என்ற பட்டியல் எங்களிடம் உள்ளது. உரிய நேரத்தில் அது வெளியிடப்படும்” என்று பகீர் புகார் கூறினார்.
ஸ்டாலின் துபாய் பயணம் செய்திருப்பது அவருடைய குடும்ப விவகாரம் என்று அண்ணாமலை வெள்ளிக்கிழமை கூறியிருந்தார். இதற்கு ஆர்.எஸ். பாரதி, அண்ணாமலை 100 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அதை இரண்டு நாட்களுக்குள் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“பாஜகத் தலைவர் அண்ணாமலை எங்கள் கட்சித் தலைவருக்கு எதிராக தொடர்ந்து மோசமான, அவதூறான அறிக்கைகளை தவறான நோக்கத்துடன் வெளியிட்டு வருகிறார்” என்று ஆர்.எஸ். பாரதி கூறினார்.
விருதுநகரில் பேசிய அண்ணாமலை, குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் புகைமூட்டத்தை ஏற்படுத்த வேறு இடத்தில் இருப்பது அவசியம். ஸ்டாலினின் துபாய் பயணமும் அப்படிப்பட்ட ஒன்றுதான் என்று குற்றம்சாட்டினார்.
அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், அவை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்று ஆர்.எஸ் பாரதி கூறினார். “நாங்கள் ஒரு சட்டப் போராட்டத்தைத் தொடங்கினால், அவரால் அதைத் தாங்க முடியாது. அவர் தன்னைத் திருத்திக்கொள்ள இதுவே கடைசி எச்சரிக்கை, கடைசி வாய்ப்பு” என்று ஆர்.எஸ். பாரதி அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீஸில் கூறியுள்ளார்.
வக்கீல் நோட்டீஸ் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு திமுக கட்சி, என் மீது, மானநஷ்ட வழக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதை அறிந்தேன்.
தி.மு.க.வின் முதன்மை குடும்பம், சாதாரண சாமானியனான என்னையும், அவர்களைப் போன்ற துபாய் குடும்பத்துக்கு, சரிசமமாக நடத்துகிறது. நம் நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. திமுகவின் அச்சுறுத்தல்களை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திப்பேன். தமிழகத்துக்கான, என் போராட்டம் தொடரும்… துணிவுடன். மக்கள் துணையுடன்…” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”