புதுடெல்லி: வரும் மக்களவை தேர்தலில் தலைமை தேர்தல் ஆணையருக்கு உதவியாக பிராந்திய தேர்தல் ஆணையர்களை நியமிக்கும்படி ஒன்றிய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க இருக்கிறது. கடந்த 1951ம் ஆண்டு நடந்த முதலாவது மக்களவை பொது தேர்தலின்போது தலைமை தேர்தல் ஆணையருக்கு உதவியாக மும்பை, பாட்னாவில் பிராந்திய தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர். அதன் பிறகு நடந்த பொது தேர்தல்களில் இவர்கள் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், சட்டம் மற்றும் பணியாளர் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு, மக்களவையில் சமீபத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், ‘தேர்தலின்போது தேர்தல் ஆணையத்துக்கு போதுமான ஊழியர்கள், அதிகாரிகள் இருக்க வேண்டும். தலைமை தேர்தல் ஆணையருக்கு உதவியாக பிராந்திய தேர்தல் ஆணையர்களை நியமிக்க அரசியல் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. எனவே, 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் இந்த ஆணையர்களை நியமிக்க வேண்டும்,’ என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசியல் சட்டம் 324(4)வது பிரிவின் கீழ் ஒவ்வொரு பொது தேர்தல்கள், மாநில சட்டபேரவை தேர்தல்கள், சட்டமேலவை இடைத்தேர்தல்கள் நடப்பதற்கு முன்பாக, தலைமை தேர்தல் ஆணையரின் ஆலோசனையின்படி பிராந்திய தேர்தல் ஆணையர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.