தமிழகம் முழுவதும் 1,000-க்கும்மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகளை தொடங்க வல்லுநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புராதனமான, தொன்மையான கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிப்பது குறித்து மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
திருப்பணிக்கான ஆய்வுகள்
இதில், ஈரோடு மாவட்டம் கல்யாண வரதராஜப் பெருமாள் கோயில், நாகப்பட்டினம் மாவட்டம் பத்ரகாளியம்மன் கோயில்,தஞ்சாவூர் மாவட்டம் சொக்கநாதசுவாமி கோயில், திருவண்ணாமலை மாவட்டம் அக்னிலிங்கம் கோயில் உட்பட 63-க்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
பணிகள் விரைவில் தொடக்கம்
இக்கோயில்களில் மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிந்துரைக்கு பிறகு, திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு விரைவில் பணிதொடங்கப்படும்.
தமிழகம் முழுவதும் இதுவரை1,000-க்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு, புராதன மற்றும் தொன்மையான கோயில்களை, தொன்மை மாறாமல் புதுப்பித்து பராமரித்தல் பொருட்டு சீரமைப்பு பணிக்கான மதிப்பீட்டை பரிசீலித்து, அதன் பின்னர் திருப்பணிகள் தொடங்க மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.