ராஜபக்சேயின் தவறான முடிவுகளால் இலங்கை மக்கள் கடும் தவிப்பு

கொழும்பு:

இலங்கையில் கோத்தபய ராஜபக்சே அரசு பொருளாதாரத்தை சீரழிக்கும் பல தவறான பொருளாதாரக் கொள்கை முடிவுகளை எடுத்ததால் தான் மக்கள் கடும் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். குறிப்பாக வரிக்குறைப்பை பிரதான வாக்குறுதியாக வைத்து ஆட்சிக்கு வந்த கோத்தபய அதைச் செயலிலும் காட்டியதால் அது பொருளாதார நெருக்கடிக்கு வழி வகுத்தது.

கோத்தபய ஆட்சிக்கு வந்த சில நாள்களில், 15 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக வரி குறைக்கப்பட்டது. இதனால் அரசு வருவாய் பெருமளவு குறைப்பு காரணமாக, 2020-இல் 5 சதவீதமாக இருந்த பட்ஜெட் பற்றாக்குறை தொகை, 2022-ல் 15 சதவீதமாக அதிகரித்தது.

இலங்கை நாணயத்தின் நெகிழ்வுத் தன்மையைப் பேணுவதற்காக இலங்கை ரூபாயின் மதிப்பை மத்திய வங்கி குறைத்தது. இதனால் ஒரு டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 200-இல் இருந்து 290 ஆக குறைந்துள்ளது. ரூபாயின் மதிப்பு குறைந்ததால், நாட்டின் விலைவாசி வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது.

இறக்குமதிப் பொருள்களுக்கு அமெரிக்க டாலர்களில் பணம் செலுத்த வேண்டும். ஆனால், இவற்றுக்குக் கொடுக்கும் அளவுக்கு இலங்கை வங்கிகளிடம் டாலர் கையிருப்பில் இல்லை. இதனால் இறக்குமதி தடைப்பட்டது. அத்தியாவசியப் பொருள்களுடன் துறைமுகங்களுக்கு வந்த கப்பல்கள், பொருள்கள் இறக்கப்படாமல் மாதக்கணக்கில் காத்திருக்கின்றன. இதன் விளைவாக, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.

பெட்ரோல், டீசல் விலையை அரசு அதிகரித்ததால், அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் அதிகரித்தன. டீசல் தட்டுப்பாட்டால், டீசலில் இயங்கும் பல அனல் மின் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதனால் கடும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் தினமும் சுமார் ஏழரை மணி நேர மின்வெட்டு நீடிக்கிறது.

இது 10 மணி நேரமாக அதிகரிக்கப்படும் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சாரத்தை நம்பியுள்ள தொழில்கள் முடங்கி ஆயிரக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

ரூ.1470-க்கு விற்பனை செய்யப்பட்ட 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.2,000 அதிகரித்து ரூ.4,199 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.254-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.104 ஆக இருந்த டீசலின் விலை ரூ.176-ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் பால் உற்பத்தி மிகவும் குறைவாகும், இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான விலையை இலங்கை அரசு அண்மையில் அதிகரித்தது. இதன்படி, ஒரு கிலோ பால் மாவு பாக்கெட் ஒன்றின் புதிய விலை ரூ.1,945 ஆகவும், 400 கிராம் பால் மாவு பாக்கெட் ஒன்றின் புதிய விலை ரூ.790 ஆகவும் உயர்ந்துள்ளது. பால் மாவு விநியோகமும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நடக்கிறது.

உணவகங்களில் பால், தேநீரின் விலை ரூ.100 ஆக அதிகரித்துள்ளது. எரிபொருள், பால், மாவு விலை அதிகரித்துள்ள நிலையில், ரூ.100-க்கு குறைவாக பால், தேநீரை விற்பனை செய்ய முடியாது என்று அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர் சங்கம் கூறுகிறது.

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ.40 ஆக அதிகரித்துள்ளது. இதனால், ஏழை மக்களின் முக்கிய உணவுகளில் ஒன்றான பாணின் (பிரெட்) விலை ஒரு நாத்தலுக்கு ரூ.130 ஆக அதிகரித்துள்ளது. ரூ.109 ஆக இருந்த ஒரு கிலோ பருப்பின் விலை ரூ.425 ஆக அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ மஞ்சளின் விலை ரூ.5,000, ஒரு கிலோ சீரகம் ரூ.8,000, பெருஞ்சீரகம் ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.