தலிபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்படுவதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கின. அதனைத்தொடர்ந்து, ஆப்கனை கைபற்றியுள்ள
தலிபான்கள்
, அங்கு புதிய அரசை அமைத்துள்ளனர். ஆனால், அவர்களது செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இதனால், பல்வேறு நாடுகள் அந்நாடுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொண்டுள்ளன.
மேலும், ஆட்சி அமைத்த பின்னர் தலிபான்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பெண்களுக்கான உரிமைகள் மறுப்பு, ஆண்கள் முகச்சவரம் செய்யக் கூடாது என்பன போன்ற பல்வேறு விஷயங்களுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. ஆட்சி அமைப்பதற்கு முன்னர் தலிபான்கள் பேசியதற்கும், தற்போதைய அவர்களது நடவடிக்கைகளிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கனில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தலிபான்களால் அந்நாட்டு பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானதாக குற்றம் சாட்டப்படுகிறது. இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் ஆப்கனை கைபற்றிய நேட்டோ படைகள் வரவுக்கு பின்னர்,
பெண்கள்
கல்வி கற்றனர். ஜனநாயக ரீதியான விஷயங்கள் ஆப்கனில் அமலில் இருந்தன.
தற்போது 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியை மீண்டும் பிடித்துள்ள தலிபான்கள், தங்களது முந்தைய ஆட்சி போன்று செயல்பட மாட்டோம் என்று கூறி வந்தனர். ஆனால், ஆட்சி அமைத்த பிறகு, மீண்டும் தங்களது பழைய பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை தலிபான்கள் மேற்கொண்டு வருவதாக விமர்சிக்கப்படுகிறது.
ரஷ்யா – உக்ரைன் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை: முடிவுக்கு வருமா போர்?
தலிபான் ஆட்சி அமைத்தபின்னர் அங்கு பெண்களுக்கு பல்வேறு கெடுபிடிகள் நிலவி வருகின்றன. பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான் அரசு அமல்படுத்தி வருகிறது. பெண்கள் பயிலும் உயர்நிலை வகுப்புகள் பலவும் மூடப்பட்டுள்ளன. நிறுவனங்களில் பெண்கள் வேலை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் தனியாக விமானத்தில் பறக்க தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் பெண்கள் தனியாக விமானத்தில் பறக்க தடை விதித்துள்ள தலிபான்கள், ஆண்கள் துணையோடுதான் பயணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் விதித்துள்ளனர்.
முன்னதாக, நீண்ட தூரப் பயணத்துக்கு ஆண்கள் வழித்துணையாக வந்தால் மட்டுமே பெண்கள் தனியாகச் செல்ல முடியும் என்ற கட்டுப்பாட்டை தலிபான் அரசு விதித்தது. மேலும், பெண்கள் இனி சீரியல்களில் நடிக்கக் கூடாது எனவும், பெண் பத்திரிகையாளர்கள் திரையில் தோன்றும்போது தலையைச் சுற்றி ஹிஜாப் அணிந்திருப்பது கட்டாயம் என்றும் தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆனால், இவையெல்லாம் தற்காலிகமான கட்டுப்பாடுகள். பணியிடங்களும், கல்வி நிறுவனங்களும் பெண்கள், பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதாக மாறியவுடன் பெண்கள் அனுமதிக்கப்படுவர் என தலிபான்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த செய்திரஷ்யா – உக்ரைன் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை: முடிவுக்கு வருமா போர்?