சென்னை:
சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி ஒருவர் 8 மாணவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:-
சென்னை ஐ.ஐ.டி.யில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த தலித் மாணவி ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் படித்து வந்தார். இவர் தன்னுடன் படிக்கும் மாணவர்கள் பலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்து இருந்தார்.
குறிப்பாக மாணவர்கள் கிங்ஷூக் தேப்சர்மா, சுபதீப் பானர்ஜி, மலாய் கிருஷ்ணா உள்ளிட்ட 8 மாணவர்களால் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக பேராசிரியர்களிடம் புகார் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த புகாரின் அடிப்படையில் மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக மயிலாப்பூரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் பேரில் 8 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் போலீசார் மாணவர்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் மாதர் சங்கத்தினரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிக்கிய மாணவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் மாணவர்கள் 8 பேரும் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.
இதையடுத்து மாணவர்களை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் நேற்று இரவு மேற்குவங்காளம் சென்றனர். அங்கு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மாணவர் கிங்ஷூக் தேப்சர்மாவை மயிலாப்பூர் போலீசார் இன்று கைது செய்தனர்.
அவரை மேற்கு வங்காளத்தில் உள்ள டைமன்ட் ஹார்பர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை கொண்டு வரும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மற்ற 7 மாணவர்களுமே மேற்குவங்காளத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.