RRR திரைப்படம் குறித்து இயக்குநர் ராஜமௌலி, ஜூனியர் NTR மற்றும் ராம் சரண் அளித்த பேட்டி
“பொதுவாகவே ராஜமௌலி படமென்றால் வில்லன் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும். இந்தப் படத்திலும் வில்லனுக்கு முக்கியத்துவம் இருக்கிறதா?”
ராஜ மௌலி : “RRR படத்தைப் பொறுத்தவரை ஹீரோ, ஹீரோயின், வில்லன் எல்லோருமே இவர்கள் இருவர்தான். மற்றவர்கள் வெறும் துணை கதாபாத்திரங்கள்தான். இந்தப் படம் முழுவதுமே இருவரின் நட்பு பற்றியதாகதான் இருக்கும். மற்றபடி இதில் வரும் அலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி அனைவருமே படத்தை சரிசமமாய் தாங்கி நிற்கும் தூண்கள்தான்!”
“இருவருமே தனித்து நின்று அல்லது ஹீரோயினுடன் ஆடும்போது மிகவும் அற்புதமாக நடனமாடக்கூடியவர்கள். ஆனால் இப்படத்தில் நீங்கள் இருவரும் இணைந்து ஆடும் போது அது எப்படி இருந்தது?”
ஜூனியர் NTR: “அதுதான் மிகப் பெரிய சவாலாக இருந்தது. இரண்டு பேரில் யார் திறமையாக ஆடப்போகிறோம் என்று போட்டியாக இருந்தது. அப்போது திடீரென இயக்குநர், ‘இது இரண்டு பேரும் தனியாக, யார் நன்றாக ஆடுகிறார்கள் எனும் போட்டியல்ல. இரண்டு பேரும் ஒரே பாடலுக்கு, ஒரே இசைக்கு ஏற்றார்போல ஒரே மாதிரி ஆடவேண்டும்’ என்று கூறிவிட்டார். இதுவே ஒரு கட்டத்திற்குமேல் போட்டி எனக்கும் சரணுக்கும் என்பது போய், எங்களுக்கும் இயக்குநருக்குமான போட்டியாக மாறிவிட்டது. பின்வரும் காலங்களில் நாங்கள் இருவரும் மீண்டும் இணைந்து பல பாடல்களில் ஆடலாம். அதுபோல எத்தனை பாடல்கள் வந்தாலும், இந்தப் பாடல் எப்போதுமே ஒரு தனித்துவமாக இருக்கும்.
ராம் சரண் : “ஒரு 5 நிமிட பாடலில் வரும் 30 நொடி காட்சிக்கு 80 வகையான நடன காட்சிகளை வைத்திருப்பார். அதிலிருந்து ஒரு வெர்ஷனை எடுப்பார். ஆடும்போது எவரேனும் ஒருவர், வெறும் ஐந்து நொடி தவறான ஸ்டெப் போட்டாலும், சரியாக வரும் வரை மீண்டும் மீண்டும் ஆட வேண்டும்.”
“RRR எனும் பிரமாண்ட படத்தை முடித்துவிட்டு, அடுத்து பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் படத்தில் நடிக்கப்போகிறீர்கள். அது உங்களுக்கு எப்படி இருக்கிறது?”
ராம் சரண்: “ஷங்கர் சாரின் படம் எப்படி இருக்கும் என்பது எல்லாருக்குமே தெரியும். RRR-ல் நான் நிறைய கற்றுக்கொண்டதனால் இயக்குநர் ஷங்கரின் தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய முடிகிறது என்று நினைக்கிறேன்.”
“தமிழ் இயக்குநர்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த இயக்குநர் யார்? உங்களை சமீபத்தில் ஈர்த்த தமிழ் படம் பற்றிக் கூறுங்கள்”
ராஜ மௌலி: “இயக்குநர் ஷங்கர் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். மணி ரத்னம் சார் எல்லாம் லெஜண்ட். இளம் இயக்குநர்களில் வெற்றி மாறனின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் கதை சொல்லும் விதம், அவரது கதாப்பாத்திரங்கள். எல்லாமுமே ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சமீபத்தில் கடைசியாக விரும்பி பார்த்த படம் மாஸ்டர். அதில் அனிருத் பிண்ணனி இசையில் பின்னியிருந்தார்.”
“RRR – போலவே தமிழ் சினிமாவில் எதாவது இரண்டு பேரை வைத்துப் படம் எடுத்தால், யாரை வைத்து எடுப்பீர்கள்?
ராஜ மௌலி: “ரஜினி சார் மற்றும் கமல் சார்தான். இவர்கள் இரண்டு பேரிலும் யார் ஹீரோவா இருந்தாலும், வில்லனாக இருந்தாலும் சரி. இரண்டு லெஜண்டுகளை ஒன்றாகத் திரையில் கொண்டு வருவது என்பதே மிகப்பெரிய விஷயம். இது என்னுடைய மிகப்பெரிய கனவு.”
உங்கள் இருவருக்கும் பிடித்த தமிழ் சினிமா இயக்குநர். நீங்கள் அவர்களுடன் வேலை செய்ய வேண்டும் என்று என்றாவது நினைத்ததுண்டா?
ராம் சரண் : வெற்றி மாறன்.
ஜூனியர் NTR : வெற்றி மாறன். “அசுரன் படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். அவ்வளவு தாக்கம் மிகுந்த படத்தை எப்படி கமர்ஷியலாக எடுத்தார் என்று இன்றும் எனக்கு புதிரான புதிராகவே உள்ளது.”