VP Duraisamy insulted on the stage : தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பாஜக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி, செய்தித் தொடர்பாளர் நாராயண் திருப்பதி மற்றும் காயத்ரி ரகுராம் போன்ற அக்கட்சியின் பல முக்கிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
அப்போது தனது தோள் மீது கைவைத்த அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் வி.பி. துரைசாமியை பாஜக எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி தட்டி விடும் காட்சி சமூக வலை தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எம்.ஆர்.காந்தியால் அவமானப்படுத்தப்பட்ட துரைசாமி
போராட்டத்தின் ஆரம்பத்தில் வணக்கம் கூறி தன்னுடைய உரையை துவங்கினார் துரைசாமி. அந்த சமயத்தில், தாமதமாக, நிகழ்வுக்கு வந்த அண்ணாமலையை பார்த்ததும் தொண்டர்கள் பாரத் மாதா கி ஜெய் என்று கோஷம் எழுப்பினார்கள். மேலும் மற்றொரு மைக்கில், விபி துரைசாமியின் பேச்சை கருத்தில் கொள்ளாமல், அண்ணாமலை வருவதை அறிவித்துக் கொண்டிருந்தார் பாஜக நிர்வாகி ஒருவர்.
கோஷத்திற்கு பிறகு மீண்டும் அவரை பேசக் கூற, தன்னுடைய அதிருப்தியை நாராயணனிடம் தெரிவித்த அவர், அனைவரும் வரட்டும் பிறகு பேசிக் கொள்கிறேன். எனக்கு மிகவும் அசிங்கமாக இருக்கிறது என்று அவர் கூற அனைத்தும் அங்கிருந்த கேமராக்களில் பதிவானது. அண்ணாமலை வந்த பிறகு, நான் மட்டும் தான் இன்னும் பேசவில்லை. தற்போதாவது பேசலாமா என்று அண்ணாமலையிடம் அனுமதி கேட்டார் வி.பி. துரைசாமி. இவை அனைத்தும் வீடியோவில் பதிவாக, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
திமுகவில் துணை பொதுச் செயலாளராகவும், 2 முறை துணை சபாநாயகராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர் வி.பி. துரைசாமி. 2020ம் ஆண்டு, திமுகவில் சாதிய பாகுபாடு அதிகமாக உள்ளது என்று கூறி பாஜகவில் அவர் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
போராட்டம் நடைப்பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், நாராயணன் திருப்பதி பேசிக் கொண்டிருந்தார். அப்போது எம்.ஆர். காந்திக்கு பின்னால் வந்து நின்ற துரைசாமி எதேட்சையாக தன்னுடைய கையை காந்தியின் தோள் மீது வைக்க, மேடை என்றும் பாராமல் அவருடைய கையை தட்டிவிட்டார் காந்தி. இதனால் துடிதுடித்துப் போன துரைசாமியின் முகம் மாறியது பெரிதும் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.