கோவா மாநிலத்தின் முதலமைச்சராக, பாஜகவைச் சேர்ந்த பிரமோத் சாவந்த், தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவி ஏற்றார்.
அண்மையில் நடந்து முடிந்த கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தம் உள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஆளும் பாஜக, 20 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றிப் பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைக்க 21 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜகவுக்கு, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியும், மூன்று சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர். இதன்படி, தொடர்ந்து இரண்டாவது முறையாக கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைவது உறுதியானது.
இதைத் தொடர்ந்து, தலைநகர் பனாஜியில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டார். இதன் பின்னர், பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்து ஆட்சி அமைக்க உரிமைக் கோரினார்.
இந்நிலையில் இன்று, தலீகாவோவில் உள்ள டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி உள்விளையாட்டு அரங்கில், பிரமோத் சாவந்த் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கோவா மாநிலத்தின் முதலமைச்சராக, தொடர்ந்து இரண்டாவது முறையாக, பிரமோத் சாவந்த் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து, பாஜகவைச் சேர்ந்த, விஸ்வஜீத் ரானே, மவுவின் கோடின்ஹோ, ரவி நாயக், நிலேஷ் கப்ரால், சுபாஷ் ஷிரோத்கர், ரோஹன் கவுண்டே, அதனாசியோ மான்செரேட் மற்றும் கோவிந்த் கவுடே ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்ற டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி உள்விளையாட்டு அரங்கில், சுமார் 10 ஆயிரம் பேர் குழுமியிருந்தனர்.
அடுத்த செய்திகொரோனா காலர் டியூன் ரத்து? மத்திய அரசு எடுக்கும் முடிவு!