சென்னை:
சென்னை மெரினா கடற்கரைக்கு எதிரே 153 ஆண்டுகளாக பாரம்பரிய சின்னமாக சென்னை பல்கலைக்கழகம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த 3 பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்றாகும்.
இன்றைய தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களின் சில பகுதிகளை உள்ளடக்கிய அன்றைய சென்னை மாகாண மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சென்னை பல்கலைக்கழகம் 1857-ம் ஆண்டு செப்டம்பர் 5-ந் தேதி தொடங்கப்பட்டது.
சென்னை பல்கலைக்கழகம் தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் தாய் பல்கலைக்கழகம் என்ற பெருமை பெற்றது.
பழமையும், பெருமையும் வாய்ந்த இந்த பல்கலைக்கழகத்தின் கட்டணம் நாட்டிலேயே மிகக் குறைவாகும். ஒவ்வொரு முறையும் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டால் அதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதனால் சென்னை பல்கலைக்கழகம் இப்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது.
சமீபத்திய இந்திய தணிக்கை அறிக்கைபடி சென்னை பல்கலைக்கழகம் தவறான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து நிதி நெருக்கடியை எதிர் கொண்டது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, சம்பளம் மற்றும் வழக்கமான திட்டமில்லா செலவினங்களக்காக திருப்பி விடப்பட்டதாக கூறி உள்ளது.
1400-க்கும் மேற்பட்ட ஒய்வூதியதாரர்களுக்காக ஓய்வூதியத்தொகை, பேராசிரியர்களுக்கான ஊதியம் போன்றவற்றுக்கே பெரும்பாலான வருவாய் செலவிடப்படுவதால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
பல்வேறு புதிய படிப்புகளை அறிமுகம் செய்வதன் மூலம் தொலைதூரக்கல்வி வருவாயை இரட்டிப்பாக்கவும் முயற்சி எடுத்து வருகின்றனர். இதுமட்டுமின்றி பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.