சென்னையில் நாளுக்கு நாள் போதைப் பொருள் விற்பனை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க சென்னை காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை பகுதிகளில் இரவு நேரங்களில் போதை மாத்திரை, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் இரவு நேரங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் காவல்துறையினர். அப்படிக் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற வாகன சோதனையின்போது, சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஒருவரிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரிடமிருந்து போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அந்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வலி நிவாரணத்துக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளைப் போதை மாத்திரைகளாக அந்த நபர் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.
அதையடுத்து அந்த நபரைக் கைதுசெய்த போலீஸார், அவருடன் தொடர்புடைய மூன்று நபர்களையும் கைது செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளிலிருந்து 50-க்கும் மேற்பட்ட போதை மாத்திரை அட்டைகள், போதை டானிக், 1 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா, இரண்டு கத்திகள் மற்றும் நான்கு ஏர்பிஸ்டல் ரகத் துப்பாக்கிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அதோடு, பத்துக்கும் மேற்பட்ட பைக், மூன்று கார்கள் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்திடம் ஆன்லைன் மூலமாக இந்த மாத்திரைகள் மற்றும் டானிக்கை வங்கி, இங்கு வாட்ஸ்அப் குழு அமைத்து அதன் மூலம் போதைப் பொருள்களைத் தேவைப்படும் நபர்களுக்கு விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. அந்த வாட்ஸ்அப் குழு குறித்தும், இவர்களுக்கு மாத்திரை வழங்கியது யார் என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.