மேற்கு வங்க மாநில சட்டசபையில்
திரினமூல் காங்கிரஸ்
மற்றும்
பாஜக
எம்எல்ஏக்களிடையே கடும் மோதல் வெடித்தது. சரமாரியாக இரு தரப்பினரும் அடித்துக் கொண்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த ஐந்து எம்எல்ஏக்கள் சபையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜிக்கும் – ஆளுநர் தங்கருக்கும் இடையே எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். அதேபோல பாஜகவினருக்கும், திரினமூல் காங்கிரஸுக்கும் இடையே மோதல் எழாத நாளே இல்லை.
இந்த நிலையில் இன்று அம்மாநில சட்டசபையில் இரு கட்சி எம்எல்ஏக்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இன்று காலை சட்டசபை கூடியதும், மேற்கு வங்க மாநில சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பாக முதல்வர் மமதா பானர்ஜி அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக அவர்களுக்கும், திரினமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.
சபாநாயகர் பீமன் பந்தோபாத்யாயா, பாஜகவினரின் கோரிக்கைகளை நிராகரித்தார். இந்த நிலையில் இரு கட்சி எம்எல்ஏகளும் சபையின் மையப் பகுதியில் கூடி அடிதடியில் குதித்தனர். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். கையில் இருந்த பேப்பர்களை தூக்கி எறிந்தனர். இதனால் சபையே போர்க்களம் போல மாறியது. சபைக் காவலர்கள் உள்ளே வரவழைக்கப்பட்டு அமைதியை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அமைதி ஏற்படவில்லை.
இதையடுத்து சபாநாயகர் சபையை ஒத்திவைத்து விட்டு வெளியேறினார். பின்னர் பாஜகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சுவந்து அதிகாரி, தீபக் பர்மன், சங்கர் கோஷ், மனோஜ் திக்கா, நரஹரி மஹதோ ஆகியோரை இந்த ஆண்டு நடைபெறும் அனைத்துத் தொடர்களிலும் கலந்து கொள்ள தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். ஐந்து எம்எல்ஏகளும் மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் சபாநாயகர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
அடுத்த செய்திகோவா முதல்வராக 2வது முறையாக பிரமோத் சாவந்த் பதவியேற்பு!