புதுச்சேரி: தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரியில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட முடிவு எடுத்துள்ளது.
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பத்து மாதங்களில் முதல்வர் ரங்கசாமிக்கும், பாஜக தரப்புக்கும் இடையில் பிரச்சினைகள் உருவாகியுள்ளது. தற்போது புதுச்சேரியில் 3-வது முறையாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால் அத்தேர்தலில் தனித்துப் போட்டியிட பாஜக முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதுபற்றி கட்சி உயர்மட்டத்தில் விசாரித்தபோது, “சமீபத்தில் நடந்த எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தைத் தொடர்ந்து, தனித்து போட்டியிட தயாராகும்படி பாஜகவினருக்கு மேலிட தலைவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். தங்கள் பகுதியில் உள்ள கொம்யூன், நகராட்சி வார்டுகளில் போட்டியிட தகுதியானவர்களை தேர்வு செய்யும்படியும் மாநில நிர்வாகிகளுக்கு கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது” என்றனர்.
இதுபற்றி மாநிலத்தலைவர் சாமிநாதனிடம் கேட்டதற்கு, “புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை தலைமைக்கு தெரிவித்தனர். இதையடுத்து மேலிடத்தில் பாஜக தனித்து போட்டியிட முடிவு எடுத்துள்ளனர். வரும் உள்ளாட்சித் தேர்தலில் புதுச்சேரியில் பாஜக தனித்து போட்டியிடும்.
தமிழகத்தில் அதிமுகவோடு கூட்டணியில் இருந்தாலும் அங்கு பாஜக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டது. அதேபோல புதுச்சேரியிலும் பாஜகவின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் தனித்து போட்டியிட உள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணி ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும். உள்ளாட்சித் தேர்தலானது ஏற்கெனவே உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியைக் கட்டுப்படுத்தாது” என்று குறிப்பிட்டார்.