நாடு பொருளாதார ரீதியாக பலவீனமடைந்து வங்குரோத்து நிலையில் இருக்கும் போது கைச்சாத்திடப்படும் உடன்படிக்கைகள் நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மீரிகம, மினிஒலுவ வித்யாவாச பிரிவேனாவில் இன்று அரசாங்கத்தின் 11 அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள் ராமண்ணா மகா நிகாயாவின் தலைவர் வண. மகுலேவே விமல மகாநாயக்க தேரரை சந்தித்தனர்.
பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையர்கள் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும், தானும் மற்றவர்களும் பாதிப்பை குறைப்பதற்காக நெருக்கடியைச் சமாளிப்பதற்கான வழியை முன்வைக்க முயற்சித்ததாகவும்கூறினார்.
“இருப்பினும், நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது. இந்த நிலையில் நாம் யாரும் அற்ப அரசியலில் ஈடுபட வேண்டாம். இது நிலைமையை மோசமாக்குகிறது.
துரதிர்ஷ்டவசமாக, நாம் பொருளாதார ரீதியாக திவாலான நிலையில், சக்தி வாய்ந்த நாடுகள் நம்மை தூண்டில் போடும் அபாயம் உள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெழுத்தாகியுள்ளன.
இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், எதிர்கால சந்ததியினர் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தின் முக்கிய அமைச்சு பதிவியிலிருந்து விமல் வீரவன்ச சில வாரங்களுக்கு முன்னர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
எனினும், தற்போதும் பிரதமர் மகிந்த ராஜபக்சவுன் நெருங்கிய உறவை பேணுகின்றமை குறிப்பிடத்தக்கது.