சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கண்ணகி நகர் கலை மாவட்டத்திற்கான 3வது பகுதிக்கான வரைபடத்தினை மேயர் திருமதி ஆர்.பிரியா இன்று வெளியிட்டார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து St+art இந்தியா நிறுவனமானது ஏசியன் பெயின்ட்ஸ் உதவியோடு சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-196க்குட்பட்ட கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் பகுதியில் உள்ள கட்டடங்களில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வண்ண ஓவியங்கள் வரைய கண்ணகி கலை மாவட்டத்தின் 3ம் பகுதிக்கான வரைபடத்தினை மேயர் திருமதி ஆர்.பிரியா இன்று வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து, வர்ண ஓவியங்களை வரைந்த கலைஞர்களுக்கு பாராட்டி பரிசினை வழங்கினார். பின்னர், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய கட்டட சுவர்களில் வரையப்பட்டுள்ள வண்ண ஓவியங்களை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு மேயர் அவர்கள் தெரிவித்ததாவது :
கண்ணகி நகர் குடியிருப்பு பகுதியானது இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மீள் குடியேற்றப் பகுதிகளில் ஒன்றாகும். இங்கு 23,700 குடும்பங்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகரின் முக்கியப் பகுதிகளில் உள்ள எழில்மிகு தோற்றத்தை போல் கண்ணகி நகர் குடியிருப்பு பகுதியிலும் வண்ண ஓவியங்கள் வரைய கண்ணகி கலை மாவட்ட 3ம் பகுதிக்கான திட்டம் வகுக்கப்பட்டு அதற்கான வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் கண்ணகி கலை மாவட்டத்தின் 3ம் பகுதியின் மூலம் பொதுமக்களுக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகள் St+art இந்தியா தொண்டு நிறுவனத்தின் சார்பில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வண்ண ஓவியங்கள் வரையும் பணியில் இந்திய மற்றும் வெளிநாடுகளை சார்ந்த 15 கலைஞர்களின் படைப்புகள், மக்கள், சுற்றுச்சூழல் சார்ந்த சுவர் ஓவியங்கள் மற்றும் குழந்தைகள் படைத்த சமூக செயல்பாடுகள் ஆகியவை தலைசிறந்த ஓவியர்களால் வரையப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கண்ணகி நகரில் முதல் இரண்டு கட்டங்களில் 15 பிளாக்குகளில் முக உருவங்கள், விலங்குகள், வண்ணத்துப்பூச்சிகள், தாவரங்கள், இயற்கை இடங்கள் ஆகியவை பலதரப்பட்ட வடிவங்களில் சுவர் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது.
டில்லி, அஹமதாபாத், ஒடிசா நாட்டைச் சார்ந்த கலைஞர்களால் இந்த ஓவியங்களை வரையப்படுகின்றன. இந்தத் திட்டமானது சென்னை மாநகரில் பிற பகுதிகளில் உள்ள தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிகளிலும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இப்பணிகளில் சிறப்பாக ஈடுபட்டுள்ள St+art தொண்டு நிறுவனத்திற்கும், அவர்களின் குழுவைச் சார்ந்தவர்களுக்கும் தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக மேயர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார் அவர்கள், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.அரவிந்த் ரமேஷ் அவர்கள், அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.