திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், வரும் ஏப்ரல் மாதம் 16-ம் தேதி சென்னை தீவுத்திடலில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத மலையப்பரின் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் மிகப் பிரம்மாண்டமாக நடத்த உள்ளது.
நேற்று தீவுத்திடலில், தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி, தமிழக தேவஸ்தான கோயில்களின் தலைவர் சேகர்ரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர் டாக்டர். சங்கர் உட்பட தேவஸ்தான உயர் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.
மேற்கொண்டு, சென்னை ஜி.என். செட்டி தெருவில், புதிதாக கட்டப்படும் பத்மாவதி தாயார் கோயில் பணிகளையும் இந்த குழு ஆய்வு செய்தது.
பின்னர், இது தொடர்பாக அதிகாரி தர்மாரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கொரோனா பரவலால் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிவாசர் திருக்கல்யாணம், வரும் ஏப்ரல் மாதம் 16-ம் தேதி சென்னை தீவுத்திடலில் மிக பிரம்மாண்டமாக கொண்டாட உள்ளது.
தலைமை செயலாளர், மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர், போலீஸ் துறை, மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளுடன் ஏற்பாடுகள் குறித்து அடுத்த வாரம் ஆலோசனை நடத்தப்படும்.
சுவாமி திருக்கல்யாணம் பரந்த மேடையில், வெகு பிரம்மாண்டமாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது” என்று தர்மா ரெட்டி தெரிவித்தார்.