தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 24-ம் தேதி, துபாய் எக்ஸ்போ-வில் கலந்துகொண்டு வெளிநாட்டு முதலீட்டார்களைச் சந்திப்பதர்காக 5 நாள் அரசுமுறை பயணமாகத் துபாய் சென்றிருந்தார். முதல்நாளில், வர்த்தக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை திறந்துவைத்து பார்வையிட்டார். பின்னர் துபாயிலுள்ள, ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டார்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டது. பின்னர் அபுதாபி சென்ற ஸ்டாலின், அங்குள்ள அமைச்சர்கள், தொழிலதிபர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதையடுத்து, ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இறுதியாக துபாய், அபுதாபி பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து விமானம் மூலம் தமிழகத்திற்குப் புறப்பட்டார்.
இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்த ஸ்டாலினை, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “முதலமைச்சராக பதவியேற்றதற்குப் பிறகு முதல்முறையாகத் துபாய், அபுதாபி போன்ற வெளிநாடுகளுக்குச் சென்றுவந்திருக்கிறேன். துபாய் போல எனது பயணமும் பிரமாண்டமாக அமைந்தது. 6 மிக முக்கிய தொழில் நிறுவனங்களுடன் ரூ. 6,100 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. இதன் மூலம், 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகப்போகிறது. ஆகவே இந்தப்பயணம் மகத்தான வெற்றிப்பயணமாக அமைந்திருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் காகிதக் கப்பல்களாகத் தான் இருந்தது. தொழில்துறைக்கு நன்றி சொன்னது போலவே, துபாய், அபுதாபி வாழ் தமிழர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்” என கூறினார்.