2-வது நாளாக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்: 90 சதவீத பஸ்கள் ஓடியதால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை

சென்னை:

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் ஊழியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவதாக கருதி 2 நாள் பொது வேலைநிறுத்தம் நடத்துவதற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன. அதனை ஏற்று நாடு முழுவதும் நேற்று பொது வேலைநிறுத்தம் தொடங்கியது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை, ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், 18 மாத அகவிலைப்படியினை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெற்றது.

தமிழகத்தில் ஐ.என்.டி. யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., தொ.மு.ச., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றன.

தொழிலாளர்கள், ஊழியர்கள் வேலைக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் தீவிரமாக பங்கேற்றதால் தமிழகம் முழுவதும் நேற்று பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 30 சதவீத பஸ்கள் மட்டுமே இயங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லக் கூடிய ஊழியர்கள் சிரமப்பட்டனர். மிக குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டதால் நீண்ட நேரம் பஸ் நிலையங்களிலும், நிறுத்தங்களிலும் காத்திருந்தனர்.

குறிப்பாக சென்னையில் 10 சதவீத பஸ்கள் மட்டுமே ஓடியதால் பொது மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள். ஆட்டோக்களும், ஷேர் ஆட்டோக்களும், சிறிய வேன்களும் அதிகளவு ஓடியது. இதனால் பொது மக்கள் அதிக கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று 2-வது நாளாக வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், பொது நிறுவன ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் அனைத்து முக்கிய நகரங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் நேற்று போல் இன்றைய வேலை நிறுத்தம் தீவிரமாக இல்லை. பஸ் தொழிலாளர்கள் பெரும்பாலானவர்கள் பணிக்கு திரும்பியதால் போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் நடந்தது.

சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் 90 சதவீத பஸ்கள் இன்று இயக்கப்பட்டன. தொ.மு.ச, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட அனைத்துதொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்களும் இன்று காலையிலே பணியில் ஈடுபட டெப்போவுக்கு வந்தனர். அவர்களுக்கு கிளை மேலாளர்கள் பணிகளை ஒதுக்கி பஸ்களை எடுத்து செல்ல அறிவுறுத்தினார்கள்.

அதன்படி சென்னை, விழுப்புரம், கோவை, சேலம், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி போக்குவரத்து கழகங்களில் வழக்கமான அளவிற்கு பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் மூலம் அரசு பஸ்கள் இயல்பான அளவில் ஓடத்தொடங்கியது.

சென்னையில் 45 ஏ.சி. பஸ்கள் உள்பட 3,233 பஸ்கள் உள்ளன. இவற்றில் 3,169 பஸ்கள் இன்று இயக்கப்பட்டன. இது 98 சதவீதம் ஆகும்.

திருநெல்வேலியில் 1,661 மொத்த பஸ்களில் 1.613 பஸ்கள் இயக்கப்பட்டது. இது 97 சதவீதம் ஆகும்.

இதேபோல சேலம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 1,900 மொத்த பஸ்களில் 1,818-ம் (95.68 சதவீதம்), கும்பகோணத்தில் 3,335 பஸ்களில் 3,117 பஸ்களும் (93.46 சதவீதம்) இன்று இயக்கப் பட்டன.

கோவையில் மொத்தம் உள்ள 2,747 பஸ்களில் 2,488 பஸ்களும் (90.57 சதவீதம்), விழுப்புரத்தில் உள்ள 3,166 பஸ்களில் 2,748 பஸ்களும் (86.80 சதவீதம்) இன்று காலை முதல் ஓடத் தொடங்கின.

மதுரையில் 2,166 பஸ்களில் 1,647 பஸ்களும் (76 சதவீதம்) விரைவு போக்குவரத்து கழக (எஸ்.இ.டி.சி.) 1,082 மொத்த பஸ்களில் 665-ம் இன்று ஓடின.

தமிழகத்தில் 2-வது நாள் பொது வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் கூட பொது மக்களை பாதிக்காத வகையில் அரசு பஸ்கள் இன்று வழக்கம் போல ஓடத் தொடங்கின.

இது குறித்து தொ.மு.ச. செயலாளர் நடராஜன் கூறுகையில், பொது மக்கள் நலன் கருதி பெரும்பாலான தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு இன்று பணிக்கு திரும்பி உள்ளனர். அரசின் வேண்டுகோளை ஏற்று இயல்பான பஸ் சேவைக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது என்றார்.

அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர். கமலக்கண்ணன் கூறுகையில், அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்கள் நேற்று பணியில் ஈடுபட்டதால் 30 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டது. பொதுமக்களுக்கு உதவிட முடிந்தது. இதற்காக முயற்சி எடுத்த அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த பொதுத்துறை நிறுவன தொழிலாளர்கள் பணிக்கு சென்று இருப்பதால் வேலை நிறுத்தம் பிசுபிசுத்து விடும் என்ற அச்சத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் பணிக்கு திரும்பி உள்ளனர். இது அண்ணா தொழிற்சங்க பேரவைக்கு கிடைத்த வெற்றி ஆகும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.