காதலன் கண் முன்னே… பாழடைந்த கட்டிடத்திற்குள் பாலியல் வன்கொடுமை.. தனிமை பேச்சால் விபரீதம்..!

கடலூரில் காதலனுடன் பாழடைந்த கட்டிடத்திற்குள் தனிமையில் பேசிக் கொண்டிருந்த இளம்பெண்ணை, மூன்று பேர் சேர்ந்து மிரட்டி வலுக்கட்டாயமாக கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலன் கண் முன்னே இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயர சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு….

கடலூர் மாவட்டம் செம்மண்டலம் பேருந்து நிறுத்தத்தில் நள்ளிரவில் 21 வயதுடைய பெண் ஒருவர் தனியாக நின்று அழுது கொண்டிருந்தார். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகமடைந்து அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், அவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தகவல் தெரியவந்தது.

நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த அந்த இளம்பெண் ஸ்டேஷனரி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரும், மஞ்சகுப்பம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்றிரவு கம்மியம்பேட்டை பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக சாலையோரமாக இருந்த பாழடைந்த கட்டிடத்திற்குள் இருவரும் தனிமையில் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

அந்த நேரம் பார்த்து அந்த கட்டிடத்திற்குள் புகுந்த 3 பேர் கொண்ட கும்பல், காதலர்களிடம் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. பின்னர், அவர்களை செல்போனில் படம்பிடித்து, மிரட்டிய அந்த கும்பல், காதலன் கண் முன்னாடியே இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளது.

சினிமா பட பாணியில் 2 பேர் சேர்ந்து காதலனை பிடித்து வைத்துக் கொண்ட நிலையில், மாறி மாறி இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததும் தெரியவந்துள்ளது. இருவரது செல்போனையும் பிடுங்கிக் கொண்ட அந்த பாலியல் கும்பல், இந்த விஷயத்தை வெளியில் சொன்னால், இருவரும் சேர்ந்திருந்த மாதிரி எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவோம் எனக் கூறி மிரட்டி அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து, காதலியை அங்கேயே விட்டுவிட்டு, காதலன் சரவணன் பயந்து போய் வீட்டுக்கு ஓடிவிட்டதாக கூறப்படும் நிலையில், செய்வது அறியாமல் பேருந்து நிறுத்தத்திலேயே நின்று இளம்பெண் அழுது கொண்டிருந்துள்ளார். அப்போது போலீசார் அவரிடம் விசாரணை செய்த போது தான், அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது.

இதனையடுத்து, இளம்பெண்ணை அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், அவர் சொன்ன அங்க, அடையாளங்களை வைத்து அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த ஆரிஃப், சதீஷ், கிஷோர் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த மூவரும் தான் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அவர்களை கைது செய்தனர்.

மேலும், அவர்களது செல்போனை கைப்பற்றி இளம்பெண் சம்பந்தமான புகைப்படங்கள், வீடியோக்கள் இருக்கிறதா என ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இந்த மூன்று நபர்கள் ஏதேனும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு உள்ளார்களா? என்பது குறித்தும் ஆய்வு செய்து வரும் போலீசார், காதலனையும் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். காதலர்கள் தனிமையில் இருப்பதை தங்களுக்கு சாதமாக்கிக் கொண்டு மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

காதலனுடன் தனிமையில் பேசுவதற்காக இரவு நேரங்களில் இதுபோன்று பாழடைந்த கட்டிடத்திற்குள் ஒதுங்கினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சான்றாக நடந்திருக்கிறது இந்த சம்பவம்… மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தவிர்க்க இரவு நேரங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.