சம்பள பாக்கியை தரும்வரை நடிகர்கள் விக்ரம் மற்றும் சிம்பு படங்களை விநியோகிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள மனுவில், மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் நடிக்க தனக்கு 15 கோடி ரூபாய் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சம்பளம் பேசியதாகவும், 2019ஆம் ஆண்டு, மே மாதம் திரைப்படம் வெளியான நிலையில், 11 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுத்ததாகவும், மீதமுள்ள நான்கு கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பதாகவும் மனுவில் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மேலும், 11 கோடி ரூபாய்க்கான வருமான வரித் தொகையை பிடித்தம் செய்து உள்ள ஞானவேல்ராஜா, அதை வருமான வரித் துறையிடம் செலுத்தவில்லை என்றும் அதில் தெரிவித்துள்ளார். எனவே இரண்டு நிதியாண்டுக்கான வருமான வரி தொகை 97 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும், தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து முன்னதாகவே வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தனக்கு மீதம் உள்ள நான்கு கோடி ரூபாய் சம்பள பாக்கியை கொடுக்க வேண்டும்., பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரித் தொகையை வருமான வரித்துறையிடம் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா செலுத்த வேண்டும்.
அதுவரை நடிகர்கள் விக்ரம், சிம்பு திரைப்படங்களில் முதலீடு செய்வதற்கும், விநியோகம் செய்வதற்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணையை மார்ச் மாதம் 31ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.