அவன் கோட்டைக்குள்ளிருந்து வெளியேற வழிதேடலாம் என்று சொன்னதும் தலையசைத்து மறுத்தாள் செம்பா.
“புதிய வழி கண்டறிய இனி காலமில்லை. ஏன் நீங்கள் வந்த வழி இருக்கும் தானே? அது தான் இப்போதைக்குச் சிறந்த வழி”
“அதுவும் சரி தான்.” இருவரும் பேசுவதைக்கேட்டு அதிர்ந்து நின்றாள் எழினி. மீண்டும் அந்த அகழி நீரில் நீச்சலா?
“ஐயோ! நான் மாட்டேன். பேசாமல் நாமிருவரும் வெளியிலேயேக் காத்திருந்திருக்கலாம். செம்பாவே வெளியே வந்திருப்பாள்.”
“இல்லை எழினி… அந்த அறையிலிருந்து தப்பியிருக்கலாம். ஆனால் மருதனாரின் ஏற்பாடில்லாமல் கோட்டைக்கு வெளியே செல்வது அவ்வளவு சுலபமல்ல..” என்றான் சங்கன்.
“ஆம் எழினி. உன் தோழி எல்லாவற்றிலும் சரியான முடிவை எடுப்பதில்லை.” திடீரென வந்த செம்பவளத்தின் பதிலில் இருவரும் திடுக்கிட்டு அவளைத் திரும்பிப் பார்த்தனர். அவள் முகத்தில் இது வரை கண்டிராத பாவனை.
நிச்சயமின்மையும் அமைதியின்மையும் கண்களில் வந்து போவதைப் பந்த வெளிச்சத்தில் கண்டுகொண்டான் அவள் சகோதரன்.
தன்னந்தனியாக இத்தகைய பேரிடரில் இருந்தும் தப்பியிருக்கிறாள், ஆனால் கண்களில் கவலை. ஏனென்று காரணம் புரியவில்லை. ஆனால் அதைக்காணச் சகியவில்லை. ஏதும் பேசாமல் அவளது கரத்தை இழுத்து இறுகப்பற்றிக் கொண்டான். சற்றே சிலிர்த்தவள் அந்தப்பிடிக்குள் விரல்களை இறுக்கிக்கொண்டாள். இனம்புரியாப்பெருங்கனமொன்று மனதிலிருந்து விலக மறுத்தது. இருவரையும் பார்த்த எழினி செருமிக்காட்டினாள்.
“அன்பின் சகோதரரே! இங்கே சற்று முன் தங்கையைப் பேய் பிசாசு என்று பிதற்றிக்கொண்டிருந்தார் ஒருவர். அவரைக்கண்டீரோ?”
“சும்மா இரு எழினி. அகழிக்குள் தூக்கிப்போட்டுவிடுவேன்.”
“எப்படியும் அதைச்செய்யத்தானே இருவருமாய் முடிவு கட்டியிருக்கிறீர்கள்.”
“பயப்படாதே எழினி. நானிருக்கிறேன்.”
“அதுவே யானை பலம் செம்பா…ஆனால் நீ அன்று சொன்னது போல முதல்முறைக்குப்பின் அதேப்பயம் இருக்காது தானே? இருந்தாலும் பழகிக்கொள்ள வேண்டியது தான். எப்படியிருந்தாலும்…”
“எப்படியிருந்தாலும்?”
“இந்தக்கூட்டணி இப்போதைக்கு முடிவடைவதில்லை என்றானபிறகு இத்தகைய துணிகரச் செயல்களுக்கு உன்னைப்போல நானும் பழகிக்கொள்ள வேண்டுமே! என்ன நான் சொல்வது? உன் அண்ணன் ஓட்ட இன்னொரு பிசாசு.”
தூம்பு வெளியிடையில் கலகலத்துச்சிரித்தபடி அவர்கள் நீர் நோக்கி நகர செம்பவளத்தின் கண்கள் நாலாபுறமும் கவலையோடு அலைய, சற்றுத்தள்ளி தூம்புகளின் அடியில் கண்ணுக்குப்புலப்படாமலிருந்த சிறி சுருங்கயொன்றை ஒரு உருவம் கம்பிப்பொறி கொண்டு மேலிருந்து அகற்றிக்கொண்டிருந்தது. திறக்கப்பட்டச் சுருங்கையிலிருந்து வெளியேறி அகழி நீருக்குள் ஆசுவாசமாக நீந்தத்தொடங்கியது ஒரு சிறு முதலை.
முதலை இறங்கிய அகழி நீரில் தம்மை நோக்கி வரும் அபாயத்தை அறியாமல் மிகவும் நிதானமாக சங்கன் எழினியைத்தோளிலிட்டு நீந்தத்தொடங்கினான். பின்னோடு செம்பவளம் சென்று கொண்டிருந்தாள். பாதுகாப்பாகவும் முடிந்த அளவு ஓசையற்றும் செல்லவேண்டுமென்பதே அவர்களின் நோக்கம்.
சங்கனின் முழுக்கவனமும் எழினியைப் பாதுகாப்பாகக் கரை சேர்ப்பதிலிருந்தது. செம்பவளத்தின் புலன்கள் அதிகக்கவனத்தோடு சூழலை உள்வாங்கிக்கொண்டிருந்தன. அமைதியும் அந்தகாரமும் நிறைந்த அந்தச்சூழலில் அவர்களின் கைகள் துடுப்பிட்ட ஓசை தாண்டி ஏதோவொன்று செம்பவளத்தின் கவனம் ஈர்த்தது. இடைச்சுற்றுச்சுவரில் சிறு சலனமும் பந்த ஒளியின் ஒரு அசைவும் நிழலும் கண்ணுற்ற செம்பவளம் ஏதோ சூதென்று உணர்ந்து கொண்டாள்.
கண்ணுக்குமுன் நெருங்கிக்கொண்டிருந்த கரையை நோக்கி வேகமாக நீந்தலானாள். பந்த ஒளியும் நீரில் கொஞ்சம் படரத்துவங்கியிருந்தது.
அப்போது திடீரென அவளது பார்வை வட்டத்தில் கருமையாய் ஒரு உருவம் அவளை நோக்கி நீந்தி வருவது தெரிந்தது.
“ஐயோ! செம்பா… முதலை” கரையேறியிருந்த எழினியின் குரலில் விதிர்த்தவள் வேகமாக கரை நோக்கி நீந்த, அவளை விட வெகுவேகமாக நீந்தி வந்த முதலை பெருவாய் திறந்து கொண்டு அவள் மீது பாய்ந்தது.
கண்ணிமைக்கும் நேரம்..
வாழ்க்கை ஒன்றுமில்லாமல் ஆகிவிடக்கூடும்.
கனவுகளெல்லாம் அகழிநீர் ஆழத்துள் அமிழ்ந்துவிடக்கூடும்..
தாயின் இறப்புக்குப்பழிவாங்கும் தன் சபதம், அண்ணன், எழினி, தாத்தா,பாண்டிமாதேவி, கடல் எல்லாம் கண்முன் வந்து போயின.
அவ்வளவு தானா என்ற நிராசையை முந்திக்கொண்டு எப்படியாவது தப்பிவிடலாமென்று அவள் துணிவைத்திரட்டி முதலையோடு போராட முனைந்த அந்தக்கணத்தில் முதலையின் மீது பாய்ந்தது அந்த உருவம்.
“போ..” ஒற்றையசையில் அதிர்வு நீங்கி நிலையைப் புரிந்துகொண்டவளாய் செம்பா வேகவேகமாக நீந்தினாள். சங்கன் கைகொடுத்துக்கரை மேலிறியதும் திரும்பிப்பார்த்தாள்.
கரிய நீரினுள் முதலையோடு அவ்வுருவம் கட்டியுருண்டு கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் முதலை அவ்வுருவத்தை சுழற்றி இழுத்துக்கொண்டு அகழியின் ஆழத்துக்குக்கொண்டு சென்றுவிடும். உயிர் காத்த அந்த உருவத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமே!
பதற்றம் மேலோங்க ஏதாவது நீளமாகத் தட்டுப்படுமா அது கொண்டு முதலையை இங்கிருந்து தாக்கலாமா என்று தேடத்தொடங்கிய செம்பாவைப்பற்றித்திருப்பி அங்கே பார் அதிசயத்தை என்று காட்டினாள் எழினி.
நீருக்குள் முதலையின் உடலோடு பிணைந்து, அதை நகரவும் நீந்தவும் விடாமல் உருண்டு களைப்படையச்செய்திருந்த அவ்வுருவம் சரியான சமயம் பார்த்துக் குறுவாளொன்றை முதலையின் கண்ணில் பாய்ச்சித்திருப்பியது. முதலை வலி தாளாமல் துடித்தது. அந்த இடைவெளியில் உருவம் முதலையிடமிருந்த விலக, விட்டால் போதுமென்று ஆழத்துக்குள் சென்று மறைந்தது அம்முதலை.
நிதானமாக நீந்தி மேலே வந்து நின்றது அவ்வுருவம்.
பந்தவெளிச்சத்தில் அவளுக்கு நேராக வந்து நின்றான் அம்மனிதன்.
கருந்தேக்கு உடலின் சிலபாகங்களிலிருந்து புதிதாய்க்கிளம்பி ஒழுகியோடியது குருதியாகத்தான் இருக்கவேண்டும். தலையோடு சேர்த்து முகத்தை மூடிய ஈரமான அந்தத் தலைச்சீராவின் இடையில் மின்னலாய்க் கருவிழிகள். அதிர்ந்து அசைவற்று நின்றாள் செம்பா.
தூரத்தில் காவற்படையினர் வரும் ஓசை.
“என் தங்கையைக் காப்பாற்றிவிட்டீர்கள். எப்படி நன்றி சொல்வதென்றேத் தெரியவில்லை. நீங்கள்?” கைகளைப்பிடித்துக்கொண்டு நன்றி சொன்ன சங்கனிடம் திரும்பினான் அந்த தலைச்சீரா மனிதன்.
“அறிமுகங்களுக்கான அவகாசமில்லை உங்களுக்கு. எனக்கும் தான்.” அவன் சொல்லி முடிக்கவும் கோட்டை உட்சுவரின் முதலை வந்த சுருங்கை அருகே ஏதோ ஓசை கேட்கவும் சரியாக இருந்தது.
“பிடி..பிடி..விடாதே பிடி..” தலைச்சீரா மனிதன் மீண்டும் அவர்களிடம் திரும்பினான்.
“பெண்ணே! உன் ஐயங்கள் அத்தனையும் தெளிவிக்கும் ஒருவரை உனக்கு முன்னால் கொண்டு வருகிறேன். அது வரை வேறு எந்த வீரதீரச்செயல்களும் செய்துவிடாமல் எனக்காகக்காத்திரு. இன்றிலிருந்து ஆறாவது நாள் கொற்கை முன்துறையில் உங்களை நான் சந்திக்கிறேன். மீன்கொடி பறக்கும் சிவப்பு நிற மரக்கலம். பத்திரம்!”
“நீங்கள் யாரென்று..”
“உதவி கேட்டீர்களே?”
“மருதனார்?…”
“அவரது மாணவன் தான் நான்.” அதற்கு மேல் அங்கே அவன் நிற்கவில்லை. காற்றுப்போல பறந்து சென்ற அவ்வுருவத்தின் நிழலைக் கண்களால் தொடர்ந்து நின்ற செம்பாவை உலுக்கி அழைத்துச்சென்றனர் சங்கனும் எழினியும்.
ஆறாவதுநாள் காலை, கொற்கைப்பட்டினம்.
மூவரும் கொற்கை வந்தடைந்தனர். வேணியும் அவள் கணவன் சாம்பனும் நடந்தவை அறிந்துச் சற்றே மிரண்டாலும் எழினியின் வயதேயொத்த செம்பவளத்துக்கான ஆதரவைத் தர முன்வந்தனர். தேவையான நாட்கள் இங்கேயே அவர்கள் தங்கலாமென்று கூறி மிகவும் கனிவாகவே நடத்தலாயினர். சங்கன் தாங்கள் கொற்கை வந்து சேர்ந்த சேதியை சாம்பன் மூலமாக தாத்தாவுக்குச் சொல்லியனுப்பினான்.
ஏற்கனவே பேச்சற்று இருந்த செம்பா கொற்கை வந்தடைந்ததும் கோடனின் கதை அறிந்து இன்னமும் நத்தையாய்ச்சுருங்கிக்கொண்டாள். முதுகாடு சென்று கோடனின் புதைவிடத்தில் கதறி அழுது மன்னிப்புக்கேட்டு வந்தும் அவள் மனம் ஆறவில்லை. சங்கனும் எழினியும் எவ்வளவோ பேசிப் பார்த்தார்கள். கேள்விக்குப் பதில்கள் வந்தனவேயன்றி அவளது கவனத்தை அவர்கள் புறம் முழுமையாகத் திருப்பவே முடியவில்லை. சதா சர்வகாலமும் ஏதோ ஒரு சிந்தனையோடு எங்கோ பார்த்தபடி அமர்ந்திருப்பது அவளது வழக்கமாகியிருந்தது.
அன்றும் அப்படித்தான். முன் துறையில் வந்து நின்று கொண்டிருந்த எண்ணிலா மரக்கலங்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் செம்பா. சற்றுத்தள்ளி தங்கையின் முகத்தைப்பார்த்தபடி சங்கன்.
செம்பா மாறிவிட்டாள் என்றெண்ணினான் அவன். அவள் பரதவக்குடியிலிருந்து வெளியேறி முழுதாய் ஒரு திங்கள் கூட ஆகியிருக்கவில்லை. அதற்குள் முற்றிலும் வேறு யாரோவாகியிருந்தாள். எந்தக்கவலையுமற்ற சிறுபெண், அவனது சுட்டித்தங்கைக் காணாமல் போயிருந்தாள். வேடிக்கையும் ஆவலும் நிறைந்த அவளது கண்களில் இப்போது அக்கறையும் கவனமும் வெகுவாகக் கூடியிருந்தன. ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் நிதானம் இருந்தது. அதன் பின்னோடு வலியும் வேதனையும் அச்சமும் உறுதியின்மையுமென அவளைக்காணவே சங்கனுக்கு வலியாய் வலித்தது.
சங்கன் பெரிய வீரனெல்லாம் இல்லை. அவனுக்குச் சாகசங்களில் விருப்பமுமில்லை. இதற்குமேல் விபரீதங்களைத் தாங்கும் குறிப்பாகச் செம்பாவுக்கு வரும் ஆபத்துகளைப் பார்த்துக்கொண்டிருப்பது அவனால் ஆகாது என்று தோன்றியது. அந்தத் தலைப்பாகை மனிதர் யாரை அழைத்து வருகிறாரோ அவரது பதில்களே செம்பவளத்தைச் சமாதானப்படுத்தப் போதுமானதாக இருக்கவேண்டும். அவளை எபாபடியாவது பாதுகாப்பான இடத்தில் அவளுக்கு உரிய இடத்தில் விட்டுவிட்டால் அத்தோடு இந்தச் சாகசங்களுக்கு ஒரு முடிவு வந்து விடும். அது விரைவில் நடக்க வேண்டும் தெய்வமே என்று உள்ளுக்குள் வேண்டிக்கொண்டான்.
“என்ன செம்பா..இன்னும் உன் முகவாட்டம் தீர்ந்தபாடில்லையே! அவ்வளவு பாடுபட்டும் மன்னரோடு பேசித்தெளிய முடியாமல் போனதென்று கவலைப்படுகிறாயா? மருதனாரின் மாணவர் தான் இன்று உன் ஐயங்களைத்தெளிவிக்கும் ஆளைக் கூட்டி வருவதாகச் சொல்லியிருக்கிறாரே?”
“யாரென்று நினைக்கிறாய்?” எழினியை இடைவெட்டிக்கேட்டாள் செம்பா.
“இல்லை. அந்த தலைப்பாகை மனிதர். அவர் யாரென்று நீ நினைக்கிறாய்?”
“அவரே தான் சொன்னாரே மருதனாரின் மாணவரென்று..”
சன்னப்புன்னகை செய்தாள்.
“பொழுதே சாய்ந்துவிடும் போலிருக்கிறதே! இன்னும் அந்த சிவப்பு நிறக்கலத்தைக் காணவில்லையே. தவறாகச்சொல்லிவிட்டாரோ?” எழினி புலம்பினாள்.
“அவர் தவற வாய்ப்பேயில்லை” செம்பவளத்தின் பதில் பிசிரற்று வந்தது.
”அட! நீ சொன்னது சரி தான். அதோ பாருங்கள்!” எழினி கைகாட்டிய திசையில் அழகிய மத்திமவகைக்கலமொன்று அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. சிவப்பு பாய்மரத்துணி படபடக்க அவர்களிருந்த கரையருகே அது வந்து நின்று அதிலிருந்து இருவர் இறங்கி அவர்களருகே வந்தனர். அருகே வர வரவே எழினியின் கண்கள் ஆம்பலாய் விரிந்தன.
“செம்பா..இவர்கள்??”
“ஆம்! அன்று கடைத்தெருவில் பார்த்தவர்கள் தாம்”
“இவர்கள் எங்கே இங்கே?”
“யார்?” சங்கனின் கேள்விக்கு எழினி அவர்கள் சந்தித்த கதையை நினைவூட்ட அவன் சினம்பொங்க முன்னேறினான். செம்பா தடுத்தாள்.
“பொறு சங்கா! இதில் வேறேதோ இருக்கிறது.”
அதற்குள் கண்ணனும் போவும் அருகே வந்திருந்தனர். செம்பவளத்தைப் பார்த்ததும் கண்ணன் குனிந்து பணிந்து மீண்டான்.
“நலமா தேவி?”
“தேவி? நான் யார் என்று..”
“யாரும் சொல்லவேண்டியதே இல்லை. பார்த்தபின் மறக்கக்கூடியதல்ல இந்தத் திருமுகம். அப்படியே உங்கள் அன்னையின் உருவம் அச்சுப்பிசகாமல் உங்களுக்கு வாய்த்திருக்கிறது.”
“அம்மா…” செம்பவளம் உணர்வுமிகுதியில் உடல் தள்ளாட அப்படியே அருகிருந்த பாறையில் அமர்ந்தாள்.
”நன்றாகப் பார்த்திருக்கிறேன் தேவி, எங்கள் பிரியத்துக்குரிய இளவரசி அவர். சிறுபிராயம் தானெனக்கு. ஆனால் அந்த முகம் மறக்காது. திருமணமாகி ஆய்க்குடிக்கு கிளம்பிய நாள் கூட எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. என்னை ஆதூரமாக அணைத்து விடைகொடுத்தார்கள். மீண்டும் வருவேனடா என்று சொல்லிச்சென்றார்கள். அதன்பிறகு அவரைப்பார்க்க எனக்கு வாய்க்கவில்லை. இத்தனையாண்டுகளுக்குப்பிறகு இதோ உங்கள் வாயிலாக அக்கையாரைப் பார்க்கும் பாக்கியம் பெற்றேன். அன்று கடைத்தெருவிலேயே இனங்கண்டு கொண்டேன் தேவி! மீண்டும் காணும் வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். தேவி! வாழ்நாள் முழுவதும் உங்களுக்குப் பணிசெய்யக் கடமைப்பட்டவன் நான், ஏற்றுக்கொள்ளுங்கள்.” தழுதழுத்தக்குரலில் சொல்லிவிட்டுச் சட்டென மண்டியிட்டு அவள் முன் தன் வாளைச் சமர்ப்பணம் செய்தான்.
“ஓ!” என்று மட்டுமே அவளால் சொல்ல முடிந்தது. சற்றுப்பொறுத்து, “ உங்களுக்கு நான் இங்கிருப்பது?”
“அன்று விழாவின் போது உங்களைத்தொலைத்துவிட்டோமே என்று வருந்திக்கொண்டிருந்தேன். ஆனால் உங்களைச்சந்திக்கச்சொல்லி சேதி வந்தது.”
“யாரிடமிருந்து..”
“என்னிடமிருந்து தான்.” அவள் எதிர்பார்த்திருந்த குரலும் குரலுக்குரியவரோடு அருகே நடந்து வந்த உருவும் கண்டதும் அதுவரை பனிமூடிய நிலவு திரை விலகியது போல பளிச்சிட்டது செம்பவளத்தின் முகம்.
(தொடரும்…)