கொழும்பில் நடைபெற்று வருகின்ற 5வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை 2022 மார்ச் 28ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.
உச்சிமாநாட்டின் பக்க அம்சமாக, கொழும்பிற்கும் புது டில்லிக்கும் இடையிலான பரந்த அளவிலான அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை இரு அமைச்சர்களும் மீளாய்வு செய்தனர்.
உறவுகளை ஆய்வு செய்த இரு தலைவர்களும், தொடர்ந்தும் அபிவிருத்தியடைந்து வரும் இரு வழிப் பிணைப்பு குறித்து திருப்தியை வெளிப்படுத்திய அதே வேளை, இரு நாடுகளும் அனுபவிக்கும் வலுவான உறவுகளை மேலும் உயர்த்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகளை ஆராய்வதில் உறுதியை வெளிப்படுத்தினர்.
இலங்கை ஜனாதிபதியும் அரசாங்கமும் கடந்த வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடாத்திய வெற்றிகரமான கலந்துரையாடலின் போது, நல்லிணக்கம் தொடர்பில் வடக்கு, கிழக்கு மக்களின் அக்கறைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டமை குறித்து அமைச்சர் ஜெய்சங்கருக்கு அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்தார்.
இலங்கையில் உள்ள தமிழர்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், நீண்டகால தீர்வை அடைந்து கொள்வதற்கும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள சாதகமான முன்னேற்றங்களை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார்.
உயர் மட்ட ஈடுபாடுகளை சீரான முறையில் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர் பீரிஸ், இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் பரஸ்பரம் பலனளிக்கக் கூடியவை எனவும் தெரிவித்தார்.
பல சவால்களுக்கு மத்தியில் பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்த இலங்கைக்கு நன்றி தெரிவித்த கலாநிதி. ஜெய்சங்கர், வரவிருக்கும் உச்சிமாநாடு பயனுள்ள ஒன்றாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான இந்திய அரசாங்கத்தின் ஆதரவை உறுதியளித்த இந்திய வெளிவிவகார அமைச்சர், இலங்கை நெருங்கிய அண்டை நாடாக இருப்பதன் உண்மையான பிரச்சினைகளை இந்தியா புரிந்துகொள்கின்றது என மீண்டும் வலியுறுத்தினார்.
முன்னதாக, கலாநிதி. ஜெய்சங்கர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசியதுடன், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவையும் சந்தித்துப் பேசினார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் சந்தித்து, கடற்றொழில் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்கான இந்திய மானியத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து அலரிமாளிகையில் கைச்சாத்திட்டதையும் கலாநிதி. ஜெய்சங்கர் நேரில் பார்வையிட்டார். செப்டம்பர் 2020 இல் நடைபெற்ற இரு பிரதமர்களின் மெய்நிகர் இருதரப்பு உச்சி மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த மானியத்தை உறுதியளித்தார்.
அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் இணைந்து இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட யாழ் கலாசார நிலையத்தை இணைய வழியில் திறந்து வைத்தார். மேலும் யாழ்ப்பாண கலாசார நிலையத்தின் முதல் ஐந்தாண்டுகளுக்கான செயற்பாட்டுச் செலவுக்கான மேலதிக நிதியுதவி தொடர்பான இராஜதந்திரக் குறிப்பும் பரிமாறிக்கொள்ளப்பட்டது.
கல்வி, கலாச்சாரம், பாதுகாப்பு, மின்சாரம், மீன்பிடி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதற்கு எதிர்பார்க்கும் இரு நாடுகளினதும் நிறுவனங்களுக்கு இடையே மேலும் ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டமையையும் இரு வெளிநாட்டு அமைச்சர்களும் பார்வையிட்டனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 மார்ச் 29