கரூர்: கரூரில் சிறுவன் பாலியல் வன்கொடுமை வழக்கில் சலவைத்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம். தீர்ப்பளித்த பெண் நீதிபதி, தற்போதுள்ள சூழ்நிலையில் 8 வயது சிறுவன் கூட தனது வீட்டு வராண்டாவின் முன்பு விளையாட முடியாத சூழ்நிலை உள்ளதென வேதனை தெரிவித்துள்ளார்.
கரூர் ஆண்டாங்கோவில் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் சண்முகவேல் (46). சலவைத் தொழிலாளியான இவர் கடந்தாண்டு செப். 19 ஆம் தேதி தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 8 வயது சிறுவனை சாக்லேட், பிஸ்கட் வாங்கித் தருவதாகக்கூறி சலவை அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அந்த அறையில் சார்ஜ் போட்டிருந்த செல்போனை எடுக்க வந்த பெண் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து சிறுவனின் தாய்க்கு தகவல் அளித்துள்ளார். இதுகுறித்து கரூர் நகர காவல் நிலையத்தில் சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போக்சோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்) கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சண்முகவேலை கைது செய்தனர்.
கரூர் நகர இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் இவ்வழக்கில் 18 சாட்சிகளிடம் விசாரணையை முடித்து நவ. 2ல் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இவ்வழக்கை மார்ச் 16 ஆம் தேதி கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு 6 நாட்களில் 13 சாட்சிகளிடம் விசாரணை செய்து 22 ஆம் தேதி இரு தரப்பு வாதங்களையம் கேட்டு 14 வது நாளில் நீதிபதி ஏ.நசீமாபானு இன்று (மார்ச் 29ம் தேதி) தீர்ப்பை வழங்கினார்.
தீர்ப்பில், தற்போது உள்ள சூழ்நிலையில் 8 வயது சிறுவன் கூட தனது வீட்டு வராண்டாவின் முன்பு விளையாட முடியாத சூழ்நிலைதான் உள்ளது என வேதனை தெரிவித்த அவர், சிறுவனை கடத்திச்சென்ற குற்றத்திற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஒராண்டு மெய்க்காவல் சிறைத்தண்டனையும், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஒராண்டு மெய்க்காவல் சிறைத்தண்டனை வழங்கியும் இவற்றை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
மேலும் இவ்வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உடல் மற்றும் மனரீதியாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தமிழக அரசு ரூ.3.50 லட்சம் இழப்பீடாக வழங்க பரிந்துரைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.