அது 2019-ம் ஆண்டு. கால்நடை மருத்துவம் மற்றும் வேளாண்மை பட்டப் படிப்பு ஆகிய இரண்டுக்கும் விண்ணப்பித்துவிட்டு, கல்லூரிப் படிப்பின் வாசத்தையே அறிந்திராத கிராமத்திலிருந்து முதல் ஆளாய் கல்லூரிக்குச் செல்லும் கனவில் இருந்தான் சந்திரன். ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைப்பகுதியில் உள்ள ஒரு பழங்குடியின கிராமமான சுண்டைப்போடு தான் சந்திரனின் ஊர். தந்தை உடுமுட்டி. தாய் பசுவி. இவர்களுக்குப் பிறந்த 11 குழந்தைகளில், சந்திரன் 5-வது ஆள். எதிர்பார்க்காத வகையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்ட, தொழிற்பாடப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியலில் பழங்குடியினர் பிரிவில் சந்திரன் முதலிடம் பெற்றான்.
`இதுநாள்வரை மாடு மேய்த்து வந்த சந்திரன், இனி கால்நடை மருத்துவர் ஆகப் போகிறான்’ என சுண்டைப்போடு கிராமமே பெரும் மகிழ்ச்சியில் இருந்தது. ஆனால், இடஒதுக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி சந்திரனின் கனவைக் கலைத்துப் போட்டது. மருத்துவர் கனவில் இருந்தவன் மறுபடியும் பாங்காட்டில் மாடு மேய்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டான். இதற்கிடையே தன்னுடைய கல்விக்கு நீதி கேட்டு நீதிமன்றம், மனித உரிமை ஆணையம் என ஏறியிறங்கினான். இருந்தும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், 3 ஆண்டுகள் கழித்து சந்திரன் வாழ்க்கைக்கு முதல்வர் ஸ்டாலின் மூலமாக ஒரு நம்பிக்கைக் கீற்று கிடைத்திருக்கிறது.
சந்திரன் விரும்பிய கால்நடை மருத்துவப் படிப்பில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், அவர் விரும்பிய மற்றொரு படிப்பான வேளாண் பட்டப்படிப்பு படிக்க சந்திரனுக்கென புதிதாக ஒரு அரசாணையை பிறப்பித்து முதல்வர் உத்தரவிட்டு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். சந்திரனுடைய கல்விக்கு ஆரம்பத்திலிருந்து சட்டப் போராட்டம் நடத்தி, தற்போது வரை பெரும் பக்க பலமாக உடனிருந்து வருபவரான சுடர் நடராஜிடம் இதுகுறித்துப் பேசினோம்.
“12-ம் வகுப்பில் வேளாண் தொழிற்பாடப் பிரிவில் 600-க்கு 444 மதிப்பெண் பெற்றார் சந்திரன். தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மொத்தமுள்ள 360 இடங்களில், தொழிற்பாடப் பிரிவில் படித்தவர்களுக்கு வெறும் 18 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. அதில் பழங்குடியினருக்கு ஒரு சதவிகித இடம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது.
அது 0.18-ஆக இருப்பதால், பழங்குடியினருக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தும் சந்திரனுக்கு, கால்நடை மருத்துவராகும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. அதேவேளையில், 12-ம் வகுப்பில் தொழிற்பாடப் பிரிவு பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 5 சதவிகித இடஒதுக்கீடு உண்டு. ஆனால், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 28 சுயநிதி (தனியார்) கல்லூரிகளிலும் 5 சதவிகித இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படாமல் இருந்தது. சந்திரனின் கல்விக்காக சென்னை உயர் நீதிமன்றம், தேசிய மனித உரிமை ஆணையம் என பல்வேறு இடங்களில் முறையிட்டும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. 2019-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து, சந்திரனின் நிலைமையைப் பற்றி எடுத்துரைத்தோம். சந்திரன் கல்லூரியில் சேர்வதற்கு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கை கொடுத்திருந்தார். இதற்கிடையே இந்தாண்டும் சந்திரன் மீண்டும் கால்நடை மருத்துவப் படிப்பிற்கும், வேளாண்மை பாடப் பிரிவிற்கும் விண்ணப்பித்துக் காத்திருந்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து, ‘சந்திரனுக்கு சுயநிதிக் கல்லூரியில் வேளாண் பட்டப்படிப்பு படிக்கும் வகையில் இடஒதுக்கீடு செய்து, முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்’ எனத் தகவல் தெரிவித்தனர். இதுநாள் வரை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 28 சுயநிதி (தனியார்) கல்லூரிகளிலும் 5 சதவிகித இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படாமல் இருந்தது. ஆனால், சந்திரனுக்காகவும், சந்திரனைப் போன்ற மாணவர்களுக்கு கல்வி கிடைக்க வேண்டுமென ‘தனியார் கல்லூரிகளிலும் 5 சதவிகித இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என முதல்வர் அரசாணையை வெளியிட்டிருக்கிறார். மேலும், சந்திரனைப் போன்று கல்வியில் பின்தங்கிய மாணவர்களால் ஆங்கிலத்தில் பட்டப்படிப்பினை படிப்பதில் சிரமம் இருக்கும் என்பதால், இந்தாண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்வழி பாடப் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் இந்தச் செயல் சந்திரனுக்கு மட்டுமல்ல, அவன் சார்ந்த பழங்குடியின சமூகத்தினருக்கும் மிகப்பெரும் நம்பிக்கையையும், வெளிச்சத்தையும் கொடுத்திருக்கிறது. இனி சந்திரன் மாடு மேய்க்கத் தேவையில்லை. ஈரோடு மாவட்டத்தில் பர்கூர் மலையின் மூலையில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மாணவனின் குரலுக்கு, முதல்வர் செவிசாய்த்து நடவடிக்கை எடுத்திருப்பது போற்றத்தக்கது. அவருக்கு எங்களுடைய சுடர் அமைப்பு சார்பாக கரம்கூப்பி நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!” என்றார்.