சென்னை:
சென்னையில் தனியார் பள்ளி மாணவன் தான் பயணம் செய்த பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். மாணவர்களை அழைத்து வரும் பள்ளி வாகனங்களை முறையாக பராமரிப்பதற்கு கீழ்கண்ட அறிவுரைகளை அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளி வாகனங்களை முறையாக பராமரித்து ஆண்டுதோறும் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
பள்ளி பேருந்தில் மாணவர்களை இருப்பிடத்தில் இருந்து அழைத்து வரும் போது பஸ்சில் உதவியாளர் ஒருவர் இருக்க வேண்டும். அவர் மாணவர்களை பாதுகாப்பாக வாகனத்தில் இருந்து இறக்கி 4 புறமும் மாணவர்கள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாணவர்களை அழைத்து வரும் பள்ளி பேருந்துகள், ஆட்டோ ரிக்ஷாக்களில் பாதுகாப்பிற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கை பின்பற்றப்பட்டுள்ளதை பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் உறுதி செய்ய வேண்டும். அவற்றில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.
மாணவர்களை ஏற்றி, இறக்குவதற்கு டிரைவருடன் ஒரு உதவியாளரையும் வைத்திருக்க வேண்டும். வாகனத்தை ஓட்டும் போது சினிமா பாடல்களை ஒலிபரப்பக் கூடாது. மாணவர்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லக் கூடாது.
டிரைவரின் குழந்தை, குடும்ப புகைப்படம் ஒன்றை அவரது இருக்கைக்கு எதிரில் பார்வையில் படும்படி வைக்கப்பட வேண்டும்.
அவசர தேவைக்கு முக்கியமான தொலைபேசி எண்களை பேருந்தினுள் மற்றும் வெளியே பார்வையில் தெரியும்படி எழுத வேண்டும். பள்ளி வாகனத்தை அதிகவேகத்தில் ஓட்டுதல், மது அருந்திவிட்டு ஓட்டுதல், உயிர் சேதம் விளைவிக்கும் ஆபத்தான முறையில் ஓட்டுதலில் ஒரு தடவை கூட டிரைவர் இருந்திருக்க கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.