ஹைதராபாத்திலுள்ள ஜூப்ளி ஹில்ஸில் வசித்து வரும் 89 வயதான வி. கிருஷ்ணா ரெட்டி என்பவர், மார்ச் 28-ம் தேதி திங்கட்கிழமை அதே பகுதியிலுள்ள யூனியன் பேங்க்கிற்கு 4.20 மணியளவில் சென்றுள்ளார். அங்கே அவர் லாக்கர் அறையில் இருந்தபோது வங்கி அதிகாரி அவர் இருப்பது தெரியாமல் அறையைப் பூட்டியுள்ளார்.
வெளியே சென்ற முதியவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால், வீட்டில் அவரை தேடியுள்ளனர். முதியவர் காணாமல் போன தகவலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அனைவருக்கும் அனுப்பி உள்ளனர். அவரை பற்றி எந்தத் தடயமும் இல்லாததால் ஜூப்ளி ஹில்ஸ் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து முதியவர் சென்ற செக் போஸ்ட் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீஸார் பேங்க் லாக்கர் அறையில் அவர் இருப்பதை மார்ச் 29 செவ்வாய்க்கிழமை கண்டுபிடித்தனர். கிட்டத்தட்ட 18 மணி நேரம் இரவில் அந்த அறையில் முதியவர் கஷ்டப்பட்டுள்ளார். அல்சைமரால் பாதிக்கப்பட்ட அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஜூப்ளி ஹில்ஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ரெட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் முதியவர் வெற்றிகரமாகக் கண்டுபிடிக்கப்பட்ட தகவலைப் பகிர்ந்துள்ளார்.