புதுடெல்லி: தமிழக கடற்கரைகளை மேம்படுத்த ரூ.100 கோடி வழங்க வேண்டும் என்று தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்
மக்களவை கூட்டத்தொடரில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசியது: “சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடற்கரைகளில் சுகாதாரம் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு தேவையாய் இருக்கிறது.
கடற்கரைகள் ஒரு சுற்றுலாத்தலமாக மட்டுமல்லாமல், சிறிய கடல் உயிரினங்களின் வசிப்பிடமாகவும் விளங்குகின்றன. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால், கடற்கரை சுற்றுச்சூழல் மற்றும் அழகியல் மேலாண்மை சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் கீழ் மாசு குறைப்பு, கடற்கரை மேம்பாடு, அழகுபடுத்துதல், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் கண்காணிப்பு குறித்த விழிப்புணர்வு செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் சென்னை மெரினா மற்றும் எலியட்ஸ் (பெசன்ட் நகர்) கடற்கரைகளில் கண்காணிப்பு கோபுரங்கள், அதிவேக மீட்புப் படகுகள், சுத்தமான துர்நாற்றம் இல்லாத பயோ-கழிப்பறைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நீலாங்கரை மற்றும் கொட்டிவாக்கம் கடற்கரையை அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி, மாமல்லபுரத்திலும் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரியில் நகராட்சி அமைப்புடன் இணைந்து பணி செயல்படுத்துகிறது. இதற்கு கூடுதலாக ரூ.100 கோடி நிதி தேவைப்படுகிறது. எனவே, தமிழக கடற்கரைகளை அழகுபடுத்த ரூ.100 கோடி வழங்க வேண்டும். மேலும் தமிழக கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழும் வழங்க வேண்டும்” என்று அவர் பேசினார்.