ஷாங்காய்,
சீனாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து அங்கு பல்வேறு நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஒரே ஒரு நோயாளி கண்டறியப்பட்டாலும் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் அப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் தனிமை முகாம்களுக்கு அனுப்பி கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தியது சீன அரசு .
ஒமைக்கரான் பரவல் காரணமாக தொற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து கடும் கட்டுப்பாடுகளை சீனா அமல்படுத்தி வருகிறது.
சீனாவின் ஷாங்காய் நகரில் மிகக் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரில் உள்ள மக்கள் கொரோனோ பரிசோதனைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரலாம் என சீன அரசு தெரிவித்துள்ளது.
மேலும் தொற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதற்காக ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களும் தங்கள் குடியிருப்பு வளாகங்களின் நடைபாதைகள், திறந்த பகுதிகளில் நடக்கக் கூடாது என்வும் அங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் 20,000 க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள், வர்த்தகர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் ஷாங்காயின் லுஜியாசுய் மாவட்டத்தில் உள்ள அலுவலகங்களிலேயே இரவு தங்கி வருகின்றனர்.
அதே நேரத்தில் ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறு வணிகங்கள், சில்லறை வணிகம் மற்றும் கேட்டரிங் தொழில்களுக்கு வரி நிவாரணம், வாடகை நீட்டிப்பு , கடன் உதவி வழங்குவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை சீன அரசு எடுத்துவருகிறது.