புது டில்லி: இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.1,000 கோடிக்கு போலி செலவு கணக்குகளை கிளைம் செய்துள்ளதாக வருமான வரித்துறை கண்டறிந்துள்ளது. இந்த செய்தியால் நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 7 சதவீதம் சரிவை சந்தித்தது.
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஹீரோ மோட்டோகார்ப்பும் ஒன்று. இந்நிறுவனம் தொடர்புடைய டில்லி மற்றும் குருகிராம் ஆகிய இடங்களில் கடந்த மார்ச் 23 முதல் 26 வரை வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். நிறுவனத்தின் தலைவரும், சி.இ.ஓ.,வுமான பவன் முஞ்சால் வீட்டிலும் சோதனை நடந்தது. அது வழக்கமான விசாரணை தான் என நிறுவனம் சார்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் ஹீரோ மோட்டார்கார்ப் ரூ.1,000 கோடி போலி செலவு கணக்குகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அது தொடர்பான கோப்புகள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக கூறியுள்ளது.
மேலும் டில்லியின் புறநகர் பகுதியான சத்தர்பூரில் ஹீரோ மோட்டார்கார்ப் தலைவர் முஞ்சால் ரூ.100 கோடியை ரொக்கமாக அளித்து பண்ணை வீட்டை வாங்கியுள்ளார். வரியை மிச்சப்படுத்த வீட்டின் மதிப்பு மாற்றப்பட்டதாகவும், இதற்காக ரூ.100 கோடி ரொக்கமாக அளிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
Advertisement