காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகேயுள்ள ஆனம்பாக்கம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் பள்ளி கழிவறையைச் சுத்தம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களால் வெளியாகி வைரலானது.
பத்தாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. மாணவி பள்ளி கழிவறையைச் சுத்தம் செய்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். மாணவியைக் கழிவறையைச் சுத்தம் செய்யச் சொன்னது யார் என்பது தொடர்பாகப் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், தற்போது ஆனம்பாக்கம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை புஷ்பாவதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனடிப்படையில் முதன்மை கல்வி அதிகாரி, அந்தப் பள்ளியின் தலைமையாசிரியையை பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார்.