ரூ.4 கோடி சம்பள பாக்கி : ஞானவேல்ராஜா மீது வழக்கு தொடர்ந்த சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் இருமொழி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது ரூ.4 கோடி பணம் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.
அதில், 2019ல் ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ் எம் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்தார். இந்த படத்திற்காக தனக்கு ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும், 11 கோடியை மட்டுமே தந்ததாகவும், மீதி 4 கோடியை தரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை செலுத்தும் வரை ஞானவேல் ராஜா தயாரிக்கும் படங்களில் அவர் முதலீடு செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும், ஞானவேல்ராஜாவின் படங்களுக்கான தியேட்டர், ஓடிடி வெளியீடு உரிமைகளை உறுதி செய்யவும் தடை தேவை எனவும் சிவகார்த்திகேயன் தரப்பில் கோரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை மறுதினம் விசாரணைக்கு வருகிறது.