ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான மேத்யூ வேட் கிட்டதட்ட 10 ஆண்டுகள் கழித்து ஐபிஎல் தொடர்களில் விளையாடி வருவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26 ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்கியது. இதில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி பயணித்த குஜராத் அணியில் மேத்யூ வேட் 30, ஹர்திக் பாண்ட்யா 33, டேவிட் மில்லர் 30, ராகுல் திவேடியா 40 ரன்கள் விளாச 19.4 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்து அபார வெற்றி பெற்றது.
இதனிடையே குஜராத் அணி வீரர் மேத்யூ வேட் கிட்டதட்ட 10 ஆண்டுகள் கழித்து ஐபிஎல் தொடர்களில் விளையாடி வருவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு மீண்டும் டெல்லி அணி சார்பில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் விளையாடினாலும் முழுநேர ஐபிஎல் தொடரில் 2011 ஆம் ஆண்டு தான் விளையாடியிருந்தார்.
அந்த தொடரில் அப்போதைய டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய அவர் அந்தச் சீசனில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் கடைசியாக விளையாடினார். அதன்பின் தற்போது 3964 நாட்கள் கழித்து மீண்டும் ஐபிஎல் தொடரில் மேத்யூ வேட் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான இவர் 2021 ஆம் ஆண்டு துபாயில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் அந்த அணியின் வெற்றிக்காக போராடி சாதித்தார்.
இதன் காரணமாகவே 2.4 கோடி என்ற தொகைக்கு குஜராத் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டு தற்போது மேத்யூ வேட் விளையாயுள்ளார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் விளையாடியபின் நீண்ட நாட்கள் கழித்து மற்றொரு போட்டியில் விளையாடிய வீரர் என்ற வித்தியாசமான சாதனையை வேட் படைத்துள்ளார்.