பாலிவுட் படங்கள் ஏன் தென்னிந்தியாவில் ஓடுவதில்லை – சல்மான்கான் வருத்தம்
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்கள் வந்த பிறகு கடந்த ஐந்து வருடங்களாக தென்னிந்தியப் படங்களுக்கென தனி மார்க்கெட் வட இந்தியாவில் உருவாகியுள்ளது. 'பான்–இந்தியா' படங்கள் என சில தெலுங்கு, தமிழ், கன்னடப் படங்களை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார்கள் தென்னிந்தியத் திரையுலகினர்.
ஆனால், பாலிவுட்டில் எடுக்கப்படும் ஹிந்திப் படங்களை தென்னிந்திய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டால் பெரிய அளவில் வரவேற்பையும், வசூலையும் பெறுவதில்லை என்பது உண்மை. இது பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான் கானை வருத்தப்பட வைத்துள்ளது. சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் இது குறித்து சல்மான் பேசியுள்ளார்.
“ஆர்ஆர்ஆர்' உள்ளிட்ட படங்கள் இங்கு பெரிய வரவேற்பைப் பெற்று நடன்றாக ஓடுகின்றன. ஆனால், நமது படங்கள் ஏன் தென்னிந்தியாவில் ஓடுவதில்லை என ஆச்சரியமாக உள்ளது. பாலிவுட் படங்களில் ஹீரோயிசம் சரியாக இல்லை என்பது ஒரு குறையாக உள்ளது. இயக்குனர்கள் மீண்டும் அந்த மந்திரத்திற்குள் செல்ல வேண்டும். ஹீரோயிசம்தான் எப்போதும் வெற்றி பெறும். சினிமா பார்க்க ரசிகர்களிடம் அதுதான் எளிதில் 'கனெக்ட்' ஆகும்.
சலீம்–ஜாவேத் காலத்திலிருந்து நம்மிடம் இந்த 'பார்மேட்' இருந்தது, ஆனால், இப்போது தென்னிந்திய இயக்குனர்கள் இதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுவிட்டனர். தென்னிந்தியாவில் ரசிகர்கள் ஹீரோக்களை பாலோ செய்வது மிக அதிகமாக உள்ளது. இப்போது நான் சிரஞ்சீவி சாருடன் நடித்துள்ளேன். அவர்கள் விதவிதமான ஸ்டைல்களை வைத்துள்ளனர், அவற்றைப் பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. 'தபாங்' சீரிஸ் படங்களை தெலுங்கில் பவன் கல்யாண் ரீமேக் செய்து நடித்தார். அப்படங்கள் அங்கு வெற்றி பெற்றன. அது போல பல படங்கள் இங்கிருந்து அங்கு ரீமேக் ஆக வேண்டும்,” என்று பேசியுள்ளார்.