3 நாள் பயணமாக இன்று இரவு டெல்லி புறப்படுகிறார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை திறந்துவைக்கும் அவர், பிரதமர் மோடி, சோனியாகாந்தி உள்ளிட்ட பலரையும் சந்திக்கவுள்ளார்.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் குறிப்பிட்ட பிரதிநிதித்துவம் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு, தலைநகர் டெல்லியில் அலுவலகம் அமைத்துக் கொள்ள 2006ஆம் ஆண்டு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்பேரில், பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் திமுக அலுவலகம் கட்ட 2013ஆம் ஆண்டில் இடம் ஒதுக்கப்பட்டது.
கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அண்ணா, கலைஞர் அறிவாலயம் என பெயரிடப்பட்டுள்ள டெல்லி அலுவலகத்தை ஏப்ரல் 2ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதற்காக பிரதமர் நரேந்திர மோடி உள்பட, நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் தலைவர்களுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மார்ச் 31ஆம் தேதி டெல்லி புறப்பட உள்ள மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை தனித்தனியே சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
20 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மற்றும் பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்கக் கோருதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை ஸ்டாலின் முன்வைக்க உள்ளார். நீட் விலக்கு மசோதா, நெடுஞ்சாலைப் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன்பின்னர், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் எம்.பி ராகுல்காந்தி உள்ளிட்டோரையும் ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.
அலுவல் பணிகளுடன், அரசியல் ரீதியான சந்திப்புகளும் இருப்பதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM