காபூல்: ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்தனர். கடந்த முறை ஆட்சி செய்தது போல் அல்லாமல் பெண்களுக்கு அவர்களது உரிமைகளை அளிப்போம் என தொடக்கத்தில் உறுதி அளித்தனர்.
ஆனால் தலிபான்கள் ஆட்சிக்குவந்தது முதல் பெரும்பாலான பகுதிகளில் பெண் குழந்தைகள் 6-ம் வகுப்புக்கு மேல் படிக்க தடை விதிக்கப்பட்டது. புதிய கல்வியாண்டு கடந்த புதன்கிழமை தொடங்கியது. அப்போது இத்தடை விலக்கிக் கொள்ளப்படும் என பலரும் எதிர்பார்த்தனர். இதற்கு மாறாக பெண் குழந்தைகள் 6-வகுப்புக்கு மேல் படிப்பதற்கான தடையை தலிபான்கள் நீட்டித்தனர்.
மேலும் கடந்த சில நாட்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய உத்தரவுகளை அவர்கள் பிறப்பித்துள்ளனர். இதன்படி, ஆண் உறவினர் இல்லாமல் விமானங்களில் பெண்கள் பயணிக்க தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில், பாரம்பரிய தலைப்பாகை, தாடி இல்லாத அரசு ஆண் ஊழியர்களை நேற்றுமுன்தினம் வீட்டுக்குச் செல்ல உத்தரவிட்டனர். ஆப்கானிஸ்தானில் சர்வதேச ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அடக்குமுறை நடவடிக்கை என ஐ.நா.தெரிவித்துள்ளது.