புதுவை சட்டசபையில் ரூ.3,613 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்: தி.மு.க-காங். வெளிநடப்பு

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் வழக்கமாக மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

கடந்த 10 ஆண்டாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு ஜூன் முதல் ஆகஸ்டு மாதத்துக்குள் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததால் மத்திய அரசு புதுவைக்கான இடைக்கால பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்று கடந்த ஆகஸ்டில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்தது. இந்த நிலையில் முழுமையான பட்ஜெட்டுக்கான பூர்வாங்க பணிகள் முடிவடையாததால் இந்த நிதியாண்டுக்கும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு முடிவு செய்தது.

இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் கூடிய சபையின் தொடர்ச்சியாக இன்று சட்டசபை கூடியது. காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையிலான 5 மாதங்களுக்கு ரூ.3 ஆயிரத்து 613 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை சபையில் தாக்கல் செய்தார்.

இதை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாக்கெடுப்பு நடத்தி சபையின் ஒப்புதலை பெற்றார்.

தொடர்ந்து 2021-22-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களை முதல்- அமைச்சர், அமைச்சர்கள் துறைவாரியாக முன் மொழிந்தனர். இதற்கும் சபையில் குறள் வாக்கெடுப்பு நடத்திய சபாநாயகர் செல்வம் ஒப்புதல் பெற்றார்.

சபையில் இடைக்கால பட்ஜெட்டை முதல்- அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சித்தலைவர் சிவா குறுக்கிட்டு, ஏன் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யவில்லை?

கடந்த ஆண்டும் இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்பட்டது. முழுமையான பட்ஜெட்டை எப்போது தாக்கல் செய்வீர்கள்? மத்திய அரசு நிதி தரவில்லையா? என கேள்வி எழுப்பினார்.

அவருடன் தி.மு.க- காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் எழுந்து நின்று கேள்வி எழுப்பினர். தி.மு.க- காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், நீட், மாநில அந்தஸ்து, மின்துறை தனியார் மயம் ஆகியவை தொடர்பான பேனர்களை தூக்கி காண்பித்தனர்.

அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு, உறுப்பினர்கள் அமைதியாக இருக்கும்படியும், முதல்-அமைச்சர் உரிய நேரத்தில் பதிலளிப்பார் என்றும் கூறினார்.

ஆனால் தி.மு.க- காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து பேசினர். சிவா பேசும்போது, டெல்லிக்கு முதல்-அமைச்சர் செல்லாததால் பட்ஜெட்டுக்கு அனுமதி தரவில்லை என கூறுகின்றனர். யாரோ ஒருவரின் கைப்பாவையாக இந்த அரசு செயல்பட வேண்டாம். ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் நடக்க வேண்டாம்.

முதல்-அமைச்சர் மிரட்டப்படுவதாக தகவல் வெளியாகிறது. இதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக்கூறி வெளியேறினார். அவருடன் தி.மு.க- காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேரும் வெளியேறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.