புதுச்சேரி: புதுச்சேரி சிறை சட்ட விதிகள், 53 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து, போலீசாருக்கு இணையான பதவி மற்றும் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கைதிகளுக்கு ஏராளமான வசதிகள் ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நாட்டில் பல மாநிலங்களில் சிறை விதிகள் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், புதுச்சேரி சிறைத்துறை நிர்வாகம், கடந்த 1969ம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விதிகளையே பின்பற்றி வந்தது.
இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம், சிறை விதிகளை மாற்றுவதற்கான வரைமுறையை வகுத்து, அந்தந்த மாநிலங்கள் சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது.அதையொட்டி, புதுச்சேரி சிறைத்துறை நிர்வாகம் சட்ட விதிகளை திருத்தம் செய்து, சட்டத்துறை மற்றும் அமைச்சரவை ஒப்புதல் பெற்று பரிந்துரைக்கப்பட்ட கோப்புக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கினார்.
தொடர்ந்து, புதுச்சேரி சிறைத்துறை சட்ட விதிகள் திருத்தம் தொடர்பான அரசாணை, கடந்த 25ம் தேதி வெளியிடப்பட்டது.சட்ட புத்தகம் வெளியீடு’புதுச்சேரி சிறை சட்ட விதிகள்-2021′ புத்தகத்தை சிறை ஐ.ஜி., ரவிதீப் சிங் சாகர் நேற்று தனது அலுவலகத்தில் வெளியிட்டார். அதனை, சிறை தலைமை கண்காணிப்பாளர் அசோகன் பெற்றுக் கொண்டார்.
ஸ்டார் அணிவிப்பு
தொடர்ந்து, சிறை துணை கண்காணிப்பாளர், உதவி கண்காணிப்பாளர் மற்றும் தலைமை காவலர்களுக்கு, போலீசாருக்கு இணையான சீருடை அந்தஸ்து அளித்து ஸ்டார்களை அணிவித்தார். சட்ட திருத்த சலுகைசட்ட விதி திருத்தத்தால் சிறை ஊழியர்கள் மற்றும் கைதிகளுக்கு வழங்கப்பட உள்ள முக்கிய சலுகைகள் சில:
* சிறை ஊழியர்களுக்கு போலீஸ் துறைக்கு இணையான சீருடை அந்தஸ்து, ஊதிய உயர்வு மற்றும் சலுகை. இரண்டு ஷிப்ட் பணி மூன்று ஷிப்ட் ஆக மாற்றம்.
* கைதியின் சீருடை கால் சட்டையில் இருந்து பேண்ட் ஆக மாற்றம்.
* காலை உணவு கோதுமை தோசை, கஞ்சிக்கு பதிலாக இட்லி, தோசை, பொங்கல், ரவை உப்புமா மற்றும் அரிசி உப்புமா வழங்கப்படும். மதிய உணவில் புதன் கிழமையில் முட்டை, ஞாயிற்று கிழமையில் கோழி இறைச்சி வழங்கப்படும்.
*சிறையில் கல்வியாளர், வேளாண் மற்றும் தொழில்நுட்ப பணியிடங்கள் உருவாக்கப்படும்.
*புதுச்சேரி சிறையில் உள்ள வெளிநாடு மற்றும் வெளி மாநில தண்டனை கைதிகள் 6 மாதத்திற்கு பிறகு சொந்த நாடு அல்லது மாநில சிறையில் தண்டனை அனுபவிக்கலாம்.
*10 ஆண்டு கடந்த ஆயுள் தண்டனை கைதிகளை குற்றத்தின் தன்மையை பொறுத்து நன்னடத்தை அடிப்படையில் முன் கூட்டியே விடுதலை செய்வது.
* தண்டனை கைதிகளின் மறுவாழ்விற்காக விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில் பயிற்சி அளித்து, விடுதலைக்கு பின் சுய தொழில் துவங்க வங்கி கடன் வசதி செய்து தருதல்.
* தொழில் செய்ய முன்வரும் கைதிகளுக்கு என திறந்தவெளி சிறை. தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் வெளியில் சென்று வேலை செய்து வர சிறப்பு அனுமதி வழங்கப்படும்.இவை உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளது.
சட்ட விதி திருத்தத்தால் வழங்கப்பட்டுள்ள சலுகைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளை சிறைத்துறை நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது.யாருக்கு, எத்தனை ஸ்டார்சிறை தலைமைக் காவலருக்கு உதவி சப் இன்ஸ்பெக்டருக்கு இணையாக ஒரு ஸ்டார், உதவி கண்காணிப்பாளருக்கு சப் இன்ஸ்பெக்டருக்கு இணையாக 2 ஸ்டார், துணை கண்காணிப்பாளருக்கு இன்ஸ்பெக்டருக்கு இணையாக 3 ஸ்டார் வழங்கப்பட்டுள்ளது.