சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் ‘பீஸ்ட்’ திரைப்படம் வருகிற ஏப்ரல்13-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இயக்குநர் நெல்சன், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘நாளை..’ என நேற்று ட்வீட் செய்திருந்தார். ஏற்கெனவே அனிருத் இசையில் ‘பீஸ்ட்’ படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி வைரலாகின. படத்தின் டீசரோ, ட்ரெயிலரோ இன்னும் வெளியாகவில்லை. விஜய் ரசிகர்கள் டீசரை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் என்பதால், டீசர் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்கிறார்கள்.
நெல்சன், கடந்த ஒருவாரமாக இரவும் பகலுமாக எடிட் ஷூட்டில் உட்கார்ந்து டீசர், ட்ரெயிலரின் எடிட் முடித்து, தயாரிப்பு தரப்பிற்கு அனுப்பி வைத்துவிட்டார். விஜய், தயாரிப்பு நிறுவனமும் டீசரைப் பார்த்து மகிழ்ந்துள்ளனர். அனேகமாக வருகிற ஏப்ரல் முதல் தேதியில் டீசரோ அல்லது ட்ரெயிலரோ வெளியாகலாம். அதற்கான அறிவிப்பு இன்று வருகிறது.
‘பீஸ்ட்’ படத்தின் ப்ரமோசனுக்காக பல திட்டங்களைத் தீட்டிவருகிறார்கள். விரைவில் படத்தின் மூன்றாவது பாடலும் வெளியாகயுள்ளது. படத்தின் ஆடியோ வெளியீடு இல்லை என்பதால், அதற்குப் பதிலாக சர்ப்ரைஸ் ஆக விஜய்யின் பேட்டி சன் டி.வி.யில் ஒளிப்பரப்பாக உள்ளது. விஜய்யை நெல்சன் பேட்டி கண்டிருக்கிறார் எனகிற தகவலும் வெளியாகி இருக்கிறது.