படத்திற்கு படம் கெட்டப்பை மாற்றி நடிக்கும் விக்ரம், ஒரு படம் முடித்த பின்பே, அடுத்த படத்திற்கான தேதிகளை ஒதுக்கி வந்தார். தற்போது, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, ‘டிமான்டி காலனி’ அஜய் ஞானமுத்துவின் ‘கோப்ரா’ படங்களில் நடித்து முடித்துவிட்டார் விக்ரம். இதற்கிடையே சில வருடங்களுக்கு முன்பு படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்ட கௌதம்மேனனின் ‘துருவநட்சத்திரம்’ திடீரென வேகம் எடுத்தது. காரைக்குடியில் நடந்த அதன் பேட்ச் ஒர்க் படப்பிடிப்பில் பங்கேற்ற விக்ரம், அதன் டப்பிங்கையும் முடித்துக் கொடுத்துவிட்டார்.
‘பொன்னியின் செல்வன்’ செப்டம்பர் 30-ம் தேதியும், ‘கோப்ரா’ வருகிற மே 26-ம் தேதியன்றும் வெளியாகிறது. இதனிடையே பா.ரஞ்சித்தின் படத்திலும் கமிட் ஆனார். ‘சார்பட்டா பரம்பரை’ படம் பிடித்துவிட, ரஞ்சித்தை அழைத்து கதை இருக்கிறதா என விக்ரம் கேட்கவும், உடனே சில ஒன் லைன்களை ரஞ்சித் சொன்னார். அதில் ஒன்று விக்ரமிற்கு மிகவும் பிடித்துப் போய்விட, அந்த லைனைத்தான் தன் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்திற்கிடையே தயார் செய்துகொண்டிருந்தார் ரஞ்சித்.
பா.ரஞ்சித் – விக்ரம் இணையும் படத்திற்கான கதை நிறைவடையும் நிலையில் இருப்பதாக சொல்கிறார்கள். அனேகமாக ஏப்ரல் இறுதியிலோ அல்லது மே மாதமோ இந்தக் கூட்டணி படப்பிடிப்புக்கு கிளம்புகிறார்கள். இதுபோக இரண்டு படங்களில் விக்ரம் நடிக்கிறாராம். ‘கடைசி விவசாயி’ மணிகண்டன் இயக்கத்தில் ஒரு படமும், கமலின் ‘விஸ்வரூபம்2’ மகேஷ் நாராயணனின் இயக்கத்தில் ஒரு படமும் பேச்சு வார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. இந்த இரண்டிலும் விஜய்சேதுபதி எதிர் நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இதில் மகேஷ் நாராயணனின் படத்தை கமல் தயாரிக்க உள்ளதாகவும் சொல்கிறார்கள். ‘கோப்ரா’வை அடுத்து ‘துருவநட்சத்திரம்’ ரிலீஸ் ஆகலாம் எனத் தெரிகிறது.