’விஜய் 66’ படத்தில் நாயகியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் தமிழ், தெலுங்கில் உருவாகும் பை-லிங்குவல் ‘விஜய் 66’ படத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கின் முன்னணி இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். ‘விஜய் 66’ படப்பிடிப்பு தெலுங்கு மற்றும் கன்னட வருடப்பிறப்பான ஏப்ரல் 2 ஆம் தேதி கோகுலம் ஸ்டுடியோஸில் நடைபெற உள்ளது என்றும் அப்படி இல்லையென்றால் ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டே வந்தாலும் இன்னும் நாயகி குறித்த அதிகாரபூர்வ அப்டேட் வெளியாகவில்லை. ஆரம்பத்தில் ‘விஜய் 66’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால், சமீபத்திய பேட்டி ஒன்றில் கீர்த்தி அதனை மறுத்துள்ளார். அவருக்கு அடுத்து ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சனோன் பெயர்கள் சொல்லப்பட்டன. ஆனால், அவர்களும் இல்லை… ‘விஜய் 66’ படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு நடிகர் வருண் தேஜ்ஜுடன் ‘லூஃபர்’ படத்தில் அறிமுகமான திஷா பதானி ஏற்கெனவே, விஜய்யுடன் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை விளம்பரத்தில் நடித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான அந்த விளம்பரத்தில், தனது நண்பன் ஃபகத் ஃபாசிலின் தங்கைத் திருமணத்திற்கு கிஃப்ட் வாங்க பணம் இல்லாததால், தான் உயிராய் நினைக்கும் கிட்டாரை விற்று மணப்பெண்ணான திஷா பதானிக்கு நெக்லஸ் பரிசளித்து அசத்துவார் விஜய். அப்போதே, அந்த விளம்பரம் கவனம் ஈர்த்திருந்தது. இந்த நிலையில், விளம்பரத்தில் நடித்த திஷா பதானிதான் இன்று ‘விஜய் 66’ படத்திற்கு நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது. பாராட்டுக்களைக் குவித்த ‘தோனி அண்டோல்ட் ஸ்டோரி’ படத்தில் திஷா பதானிதான் நாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.