‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் குறித்து கிண்டலாக விமர்சனம் செய்த டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் வீட்டுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர், ஒருகட்டத்தில் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காஷ்மீரில் 1990-களில் பண்டிட் சமூகத்தினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை மையமாக வைத்து வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்த திரைப்படத்துக்கு பாஜக ஆளும் மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தலைநகர் டெல்லியிலும் இந்த திரைப்படத்துக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், “தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்துக்கு வரி விலக்கு கேட்கிறார்கள். அதற்கு பதிலாக அந்த திரைப்படத்தை யூடியூப் வலைதளத்திலேயே இலவசமாக வெளியிடலாம்” எனக் கூறினார்.
இந்நிலையில், இந்த திரைப்படத்தை கேலி செய்ததன் மூலம் காஷ்மீரில் படுகொலை செய்யப்பட்ட இந்துக்களை அவர் கிண்டல் செய்ததாக கூறி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வீட்டின் முன்பு பாஜகவினர் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டக்காரர்கள் சிலர், போலீஸார் வைத்திருந்த தடுப்புகளை அப்புறப்படுத்தி விட்டு கேஜ்ரிவால் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர். மேலும், அவரது வீட்டு கேட்டின் மீது பாஜகவினர் காவி சாயத்தையும் ஊற்றினர். அவர்களை அங்கிருந்த போலீஸாரும், முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகளும் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீஸாருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சில போலீஸார் காயமடைந்தனர். பிறகு லேசான தடியடி நடத்தி பாஜகவினரை போலீஸார் கலைத்தனர்.
கொலை செய்ய முயற்சி
இதனிடையே, இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, “அர்விந்த் கேஜ்ரிவாலையும், ஆம் ஆத்மியையும் தேர்தல்களில் பாஜகவால் வெல்ல முடியவில்லை. இதனால் கேஜ்ரிவாலை பாஜக கொலை செய்ய நினைக்கிறது. இதற்காகவே, இன்று பாஜகவை சேர்ந்த ரவுடிகள் கேஜ்ரிவால் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்றிருக்கிறார்கள்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM