வாகனத்தின் சைரனை அடித்ததால் பிரச்சனை- பரங்கிப்பேட்டையில் இரு தரப்பினர் மோதல்

கடலூர்:
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமர். இவர் திமுக ஒன்றிய பொருளாளர். இவரது உறவினர் பரந்தாமன் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒன்றிய பொருளாளராக உள்ளார். சம்பவத்தன்று மாலையில் இவர்களின் தங்கை மகன் ஹரிஷ், வசந்த் ஆகியோர் வயல் வெளியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, வானவதெருவில் ஹாரன் அடித்ததாக கூறப்படுகிறது.
இதனை பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவி சங்கர் தேன்மொழியின் உறவினர் விக்னேஷ் மற்றும் காண்டீபன் உள்ளிட்டோர், எதற்கு ஹாரன் அடிக்கிறாய்? என்று கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. 
ஹரிஷ் மற்றும் வசந்த் ஆகியோர் வீட்டிற்கு வந்ததும் நடந்த சம்பவம் குறித்து மாமா ராமர் மற்றும் பரந்தாமனிடம் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் விக்னேஷ் மற்றும் காண்டீபனிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் இருவரும் வீடு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில் விக்னேஷ், காண்டீபன் ஆகியோர் இரவு நேரத்தில் ரவுடிகளுடன் வந்து, ராமர், பரந்தாமன் மற்றும் அவர்களின் உறவினர்களை ஆயுதங்களால் கடுமையாக தாக்கி உள்ளனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது சம்பந்தமாக பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் இரண்டு தரப்பையும் சேர்ந்த 5 பேர் மீது கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.