புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீடு, பாஜக குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில துணை முதல்வர் மனீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவையில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு மாநிலத்தில் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏக்கள் வலியுறுத்தியபோது, “அந்தப் படத்தை மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என்றால், இயக்குநரிடம் படத்தை யூடியூபில் அப்லோடு செய்யச் சொல்லுங்கள். காஷ்மீர் பண்டிட்கள் பெயரில் சிலர் கோடிக்கணக்கில் சம்பாத்திக்கின்றனர். நீங்கள் போஸ்டர் ஒட்டும் பணியை செய்கிறீர்கள்” எனத் தெரிவித்திருந்தார். மேலும், கடந்த 8 ஆண்டுகளாக காஷ்மீர் பண்டிட்களுக்கு பாஜக அரசு செய்தது என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று புதன்கிழமை பாஜக இளைஞர் அமைப்பின் தலைவரும், எம்பியுமான தேஜஸ்வி சூர்யா தலைமையில், பாஜகவின் இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சாவினர், அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்லி முதல்வர் வீட்டின் முன் கேட்டும், சிசிடிவி கேமராக்களும் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
முதல்வரின் வீடு தாக்கப்பட்டது குறித்து டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா கூறும்போது, “பாஜக குண்டர்களால் இன்று டெல்லி முதல்வரின் வீடு தாக்கப்பட்டுள்ளது. சமூக விரோத சக்திகளால் முதல்வர் வீட்டின் பாதுகாப்பு தடுப்புகள், சிசிடிவி கேமரா சேதப்படுத்தப்பட்டுள்ளன” என்று குற்றம்சாட்டினார்.
முதல்வர் வீடு முற்றுகை குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜகஎம்பி தேஜஸ்வி சூர்யா, “இந்த நாட்டின் இந்துக்களை அவமானப்படுத்தியதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை அவரை யுவமோர்சா விடாது” என்று தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் குறித்து ஆம் ஆத்மியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ”காஷ்மீர் பண்டிட்களின் மறுவாழ்வுக்காக பேசியதற்காக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீடு தாக்கப்பட்டுள்ளது, கதவு, சிசிடிவி காமிராக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவமோர்ச்சாவின் தேசிய செயலாளர் தஜிந்தர் பால் சிங் பக்கா இதுகுறித்து கூறுகையில், ”தொண்டர்களும், அமைப்பின் தலைவர்களும், கெஜ்ரிவாலின் வீட்டிற்கு அருகே போராட்டம் நடத்தினர். ஆனால் நாசவேலையில் ஈடுபடவில்லை. நாங்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டோம். தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட எங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் தடுக்கப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் விடுவிக்கப்பட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் வீடு தாக்கப்பட்டது குறித்து டெல்லி போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் 1 மணியளவில் போரட்டக்காரர்கள் இரண்டு தடுப்புகளை உடைத்து முதல்வர் இல்லத்தை அடைந்தனர். அங்கு அவர்கள் சலசலப்பை உருவாக்கி கோஷங்களை எழுப்பினர். அவர்கள் ஒரு சிறு பெயின்ட் பெட்டியை எடுத்துச் சென்று, வாசலில் பெயின்ட் வீசினர். இதில் பூம் தடுப்பும் சிசிடிவி கேமராவும் அழிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. போராட்டக்காரர்களை அகற்றுதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, 70 பேர் கைது செய்யப்பட்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டெல்லி வடக்கு டிசிபி சாகர் சிங் கல்சி தெரிவித்துள்ளார்.